புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியேறுவார் என்றும், இந்த அரசும் வெளியேறும் என்றும் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அதன் பிறகு ஜனநாயகத்தை சீரமைக்கும் பணி தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சிறப்புத் தீவிர திருத்தத்தின் மூலம் 13 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதையும், தகுதி உள்ளவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான படிவம் 6-ல் திருத்தம் செய்யப்பட்டதையும் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், இதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதோடு, தடையை மீறி போராட முயல்பவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஞானேஷ் குமார் வெளியேறுவார், இந்த அரசும் வெளியேறும். அதன் பிறகு ஜனநாயகத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கும்’ என தெரிவித்துள்ளார்.
சிஜேபியின் இந்த போராட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள இடதுசாரி அமைப்புகள், போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளன. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, மூத்த தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிஜேபி நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட அதன் முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட முயல்பவர்கள் பலரும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக, டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 23,000 வீரர்களும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட முயல்பவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், “இது அவசரநிலை காலத்தைவிட மோசமானது. மோடியின் முழுமையான சர்வாதிகார ஆட்சியின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
விமானத்தில் இருந்து இறங்கிய உடனேயே கரப்பான்பூச்சி இயக்கத்தினரை கைது செய்வது முன்னெப்போதும் இல்லாத அளவிலான அச்சத்தை வெளிப்படுத்துகிறது. தேர்தல் முறைகேடு மூலமாகவே தான் வெற்றி பெற்றோம் என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும்.
இப்போது ஜனநாயகத்தை முழுமையாக நசுக்குவதன் மூலம் தனது மோசடியைப் பாதுகாப்பதில் அவர் தீவிரமாக உள்ளார். ஞானேஷ் குமார் வெளியேற வேண்டும். மோடியும் வெளியேற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.