தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்

 
இந்தியா

21 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளிவந்தார் குர்மீத் ராம் ரஹீம்

வேட்டையன்

சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 21 நாள் பரோலில் சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.

ஹரியானாவின் ரோத்தக் சிறையில் அவர் தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு பரோல் கிடைத்ததைத் தொடர்ந்து, இன்று (ஆக.25 - செவ்வாய்க்கிழமை) சிறையில் இருந்து அவர் வெளிவந்தார். இதையடுத்து சிர்சா நகரில் உள்ள தேரா சச்சா சவுதா தலைமையகத்துக்கு புறப்பட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 2017-ல் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது. இது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் 17-வது முறையாக சிறையில் இருந்து அவர் பரோலில் வெளிவந்துள்ளார்.

அவரது பெண் சீடர்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த வழக்கில், 2017-ல் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அப்போது சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போது பஞ்சாப், ஹரியானாவில் கலவரம் வெடித்தது. அதில் 31 பேர் பலியாயினர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதன் பின்னர் கடந்த 2021-ல் உள்ளூர் பத்திரிகையாளர் கொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம். இந்த வழக்கில் இருந்து கடந்த மார்ச் மாதம் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?

கடந்த 1991 செப்டம்பர் 23-ல் தேரா சச்சா சவுதாவின் புதிய தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் பதவியேற்றார். அவருக்கு இப்போது வயது 59. ஹரியானா மாநிலம் சிர்சாவில் அந்த அமைப்பின் தலைமை ஆசிரமம் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்களும் சுமார் 6 கோடி பக்தர்களும் உள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2014 ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை ஆதரித்தார்.

கடவுளின் மனிதர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட குர்மீத், ஆடம்பர வாழ்க்கைக்குப் பேர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT