புதுடெல்லி: இந்திய பெருங்கடல் – பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலுவடைய கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் அவசியம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அண்மையில் நிகோபார் தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, “கிரேட் நிகோபார் திட்டம், இயற்கை மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான மிகப்பெரிய மோசடி’’ என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கிரேட் நிகோபர் திட்டத்தின் கீழ் ரூ.81,000 கோடியில் 4 முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பயணிக்கும் சரக்கு கப்பல்களை சிங்கப்பூர், கொழும்பு துறைமுகங்கள் கையாள்கின்றன. இதற்கு மாற்றாக இந்தியாவின் நிகோபார் தீவின் கலாத்தியா வளைகுடாவில் மிகப்பெரிய துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் சர்வதேச கடல் வணிக போக்குவரத்தில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும்.
மேலும், ராணுவத்துக்குப் பயன்படும் வகையிலும் இந்தத் துறைமுகம் இருக்கும். நிகோபார் தீவில் பிரம்மாண்ட கிரீன்பீல்ட் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இதுவும் ராணுவ பயன்பாட்டுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்படும்.
இதன்மூலம் சுற்றுலா, சரக்கு போக்குவரத்து மேம்படும். விமானப் படையின் வலுவான தளமாகவும் செயல்படும்.நிகோபர் தீவில் குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள், சுற்றுலா வசதிகள், பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரம்மாண்ட ஒருங்கிணைந்த நகரம் உருவாக்கப்பட உள்ளது. இந்த நகரத்தில் 5 லட்சம் பேர் வரை வசிக்க முடியும்.
மின் உற்பத்தி நிலையம்
துறைமுகம், விமான நிலையம், ஒருங்கிணைந்த நகரம் ஆகியவற்றுக்கு மின்சாரம் விநியோகம் செய்ய எரிவாயு மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
கிரேட் நிகோபார் துறைமுக திட்டத்தால் இந்தியாவின் கடல் வழி வர்த்தகம் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா துறை மேம்படும். கணிசமான முதலீடுகள் குவியும்.
இந்திய பெருங்கடல், பசிபிக் கடல் பிராந்தியத்தில் இந்தியா வலுவடைய கிரேட் நிகோபார் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் அவசியம். இந்த திட்டத்தால் அந்தமான்- நிகோபார் தீவுகளில் 1.82 சதவீத காடுகள் மட்டுமே அழிக்கப்படும். இதனால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.