புதுடெல்லி: அந்தமான் நிகோபார் தீவுகளில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.80,000 கோடி மதிப்பிலான ‘கிரேட் நிகோபார்’ திட்டத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை என்ஜிடி தள்ளுபடி செய்தது.
சுற்றுச்சூழல் ஆர்வலரான ஆஷிஷ் கோத்தாரி என்பவர் கிரேட் நிகோபார் திட்டத்துக்கு எதிராக என்ஜிடியில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் மனுவில், இத்திட்டம் 2019-ம் ஆண்டின் தீவு கடலோர ஒழுங்குமுறை மண்டல (ஐசிஆர்இசட்) விதிகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, 700 ஹெக்டேர் பரப்பளவிலான கட்டுமானங்கள், வளர்ச்சிப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வருவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் வத்சவா தலைமையிலான ஆறு பேர் கொண்ட சிறப்பு அமர்வு அந்த திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருப்பதாகவும், எனவே இதில் தலையிடத் தகுந்த காரணங்கள் இல்லை என்றும் என்ஜிடி கூறியுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஒழுங்குமுறை முகமைகளும் முழுமையாகவும், கண்டிப்புடனும் பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
கிரேட் நிகோபார் திட்ட மதிப்பு ரூ.80,000 கோடி ஆகும். இத்திட்டம் 166 சதுர கிலோ மீட்டரில் (இதில் 130 சதுர கி.மீ. வனப் பகுதியும் அடக்கம்) செயல்படுத்தப்பட உள்ளது. சரக்கு பெட்டக மாற்று முனையம், ஒருங்கிணைந்த நகரம், ராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டிற்கான விமான நிலையம், 450எம்விஏ எரிவாயு மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.