புதுடெல்லி: எல் நினோ தாக்கம் மற்றும் தாமதமான பருவமழையால் கடும் சவால்கள் ஏற்பட்டபோதிலும், 2026-27 காரீஃப் பருவத்தில் உணவுதானிய உற்பத்தி 167.14 மில்லியன் டன்னாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரி உற்பத்தியை விட 9.77 மில்லியன் டன் அதிகம் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த 2025-26-ல் நாட்டின் மொத்த உணவுதானிய உற்பத்தி 378.54 மில்லியன் டன் என்ற வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. செப்டம்பரில் அரசு நிர்ணயித்த 196.21 மில்லியன் டன் காரீஃப் இலக்கை விட தற்போதைய கணிப்பு குறைவாக உள்ளது.
எல் நினோ காரணமாக 2026-27-க்கான முழு ஆண்டு உணவுதானிய உற்பத்தி இலக்கு அப்போது 373.93 மில்லியன் டன்னாகக் குறைக்கப்பட்டிருந்தது. 2026 காரீஃப் பருவத்தில் சிறுதானிய உற்பத்தி 38.11 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துகள் உற்பத்தி 23.95 மில்லியன் டன்னாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரீஃப் அறுவடை முடிந்த நிலையில், விவசாயிகள் தற்போது கோதுமை உள்ளிட்ட ரபி பருவ பயிர் விதைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
2025-26-ல் உணவுதானிய உற்பத்தி, 2024-25-ல் இருந்த 357.73 மில்லியன் டன்னிலிருந்து 5.8% உயர்ந்து 378.54 மில்லியன் டன்னாகச் சாதனை படைத்துள்ளது. அரிசி உற்பத்தி 3.3% அதிகரித்து 155.15 மில்லியன் டன்னையும், கோதுமை உற்பத்தி 3.5% அதிகரித்து 122.06 மில்லியன் டன்னையும் எட்டியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.