குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பெண் மீது, பின்பக்கத்தில் இருந்து காரை கொண்டு மோதிய ஓட்டுநர் மீது குருகிராம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. அதனை அடிப்படையாக கொண்டு குற்றச்சாட்டுக்கு ஆளான கார் ஓட்டுநர் மீது குருகிராம் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். செக்டார்-56 காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவாகி உள்ளது. காவல் துறையின் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவு இந்த வீடியோவை இன்று (செப்.14) இடைநிறுத்தி உள்ளதாக தகவல்.
விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இயக்கிய பெண்ணிடம் இருந்து தங்களுக்கு எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இதன் மீது காவல் துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ளும் முயற்சியிலும் போலீஸார் இறங்கி உள்ளனர்.
“கோல்ஃப் கோர்ஸ் சாலையில் நடைபெற்ற விபத்து குறித்து காவல் துறை சார்பில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய காரின் விவரங்களைக் கொண்டு அதை ஓட்டியது யார் என்பது குறித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ளவும் முயற்சித்து வருகிறோம். அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அது சார்ந்த நடவடிக்கை இந்த வழக்கில் எடுக்கப்படும்.
குருகிராம் பகுதியில் இதுபோன்ற விபத்துகள் எது நடந்தாலும் அது குறித்து தானாக முன்வந்து காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும். இந்த நடவடிக்கை சட்டத்தின் கீழ் இருக்கும். இதற்கென பிரத்யேக பிரிவு ஒன்றை அமைத்துள்ளோம்” என்று குருகிராம் காவல் உதவி ஆணையர் அபிலாக்ஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய காரின் உரிமையாளர் மனிஷ் கூறியதாவது: “அந்த வாகனம் என்னுடையது தான். நான் பணியில் இருந்தேன். எனது நண்பர் கல்யாண் சிங், என்னிடமிருந்து காரை வாங்கி சென்றிருந்தார். இந்த விபத்து குறித்து எனக்கு இன்று காலை தான் தெரியவந்தது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை. எனது தந்தை மற்றும் சிலரை அவரது வீட்டுக்கு அனுப்பி உள்ளேன். அவர் ஹரியானாவின் பல்வால் மாவட்டத்தை சேர்ந்தவர்” என்றார்.
இந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கு ஆளான கார் ஓட்டுநர் தற்போது போலீஸ் பிடியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.