பனாஜி: கோவாவின் அர்போரா கிராமத்தில் 'பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக 3 அதிகாரிகளை கோவா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கியது.
தீ விபத்தை தொடர்ந்து தாய்லாந்து தப்பிச் சென்ற கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் சவுரவ் லூத்ரா (40), கவுரவ் லூத்ரா (44) ஆகியோருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்டர்போல் தலைமையகத்தை சிபிஐ அணுகி அவர்கள் இருவருக்கு எதிராகவும் நீல நோட்டீஸ் பிறப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
வழக்கு விசாரணை தொடர்பாக ஒரு நபரின் அடையாளம், இருப்பிடம் அல்லது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகள் சேகரிக்க நீல நோட்டீஸ் அனுமதிக்கிறது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கேளிக்கை விடுதி மட்டுமின்றி கோவாவின் வகேட்டர் பகுதியில் உள்ள ரோமியோ லேன் என்ற மற்றொரு கேளிக்கை விடுதியும் நேற்று இடித்து அகற்றப்பட்டது. முதல்வர் பிரமோத் சாவந்த் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.