கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஹமீம் மண்டல் என்பவரை சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்) போலீஸார் அண்மையில் கைது செய்தனர். மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்த இவர் சதித் திட்டம் தீட்டியிருந்தார்.
இந்நிலையில் ஹமீம் மண்டலிடம் நடத்திய விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவரது தோழி அர்பிதா சர்க்காரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாகிப்கஞ்ச் பகுதியில் அர்பிதா கைது செய்யப்பட்டார்.
செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக ‘ஹனிடிராப்’ (காதல் வலையில் வீழ்த்தி மிரட்டும்) உத்தியை பயன்படுத்தும் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக அர்பிதா செயல்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அர்பிதாவின் மொபைல் போன் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார் அவரது தகவல் தொடர்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.