ஹரித்துவார்: “டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியவர்கள் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சித்துள்ளார். நாடானது தெருக்களில் இருந்து இயக்கப்படக்கூடாது என்றும் அது நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயக்கப்பட வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீடத்தில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில், பங்கேற்ற அனைவருக்கும் குரு தீட்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், “குரு பூர்ணிமா தினமான இன்று, இங்குள்ள ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகள் - அவர்கள் பிராமணர்களாக; க்ஷத்ரியர்களாக; வைசியர்களாக; சூத்திரர்களாக அல்லது எந்த சாதி, வர்க்கம், சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் - அனைவரும் குரு பாரம்பரியப்படி தீட்சை பெறுகிறார்கள். இதுவே எங்களின் ஒரே தீர்மானம்.
நாம் அனைவரும் மகத்தான முனிவர்கள் மற்றும் ரிஷிகளின் வழித்தோன்றல்கள், பரம்பரை வாரிசுகள், அவர்களின் உயிருள்ள வடிவங்கள். அந்த முனிவர்களின் வழித்தோன்றல்களாக, ரிஷி கலாச்சாரம் மற்றும் சனாதன கலாச்சாரத்தின் மிகச்சிறந்த அடையாளமாக பூணுல் அணிந்துள்ளோம்.
இன்று, நம் முல்லாக்களும், மவுல்விகளும் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால், நான் சொல்வதற்கு நேரடி ஆதாரம் உள்ளது. இன்று முஸ்லிமாக உள்ள ஒருவரிடம், இதற்கு முன் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்று கேட்டால், நாங்கள் மதம் மாறிய முஸ்லிம்கள் என்று சொல்வார்கள்.
முஸ்லிமாக மாறுவதற்கு முன் என்னவாக இருந்தீர்கள் என்று கேட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ, அதேபோலத்தான் நாங்களும் இருந்தோம் என்று சொல்வார்கள். இதன்பொருள் என்னவென்றால், நாம் அனைவரும் ஒரே மாதிரியான முன்னோர்களையே கொண்டுள்ளோம். நம் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏ, ஒரே சனாதன தர்மம், ஒரே தேசிய தர்மம், ஒரே மனித தர்மம், ஒரே வம்சாவளி ஆகியவை உள்ளன.
நம் முன்னோர்களின் பண்புகளை நம் நடத்தையில் பிரதிபலிப்போம். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, செழிப்புக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நான் மேலும், ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கடந்த சில நாட்களாக சில சக்திகள் ஜந்தர் மந்தரில் கூடி இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தின. வசைபாடுவதும், அவதூறு பேசுவதும் நமது கலாச்சாரத்திலோ அல்லது இயல்பிலோ இல்லை.
தரக்குறைவான, அவதூறான மொழியைப் பயன்படுத்துவது நமது கலாச்சாரமோ, இயல்போ அல்ல. நாம் எப்போதும் நம் பெரியவர்களை மதித்து வந்துள்ளோம். எனவே, உங்கள் பெரியோர்களை மதியுங்கள். அவர்களை கவுரவியுங்கள். ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றை ஜனநாயக மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்ட வழிகளில் வெளிப்படுத்துங்கள்.
நாடானது தெருக்களில் இருந்து இயக்கப்படக்கூடாது. அது நாடாளுமன்றத்தின் மூலமாகவே இயக்கப்பட வேண்டும். யார் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும், யார் இருக்கக்கூடாது என்பதை தெருக்களில் தீர்மானிக்க முடியாது. அதை பிரதமரும் நாடாளுமன்றமுமே தீர்மானிப்பார்கள்.
சிலர் விடுதலை கோரி முழக்கங்களை எழுப்பினர். பிராமணியத்தில் இருந்து விடுதலை, ஆர்எஸ்எஸ் இடமிருந்து விடுதலை, சாதியிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.
பிராமண குடும்பத்தில் பிறந்த பிரஹலாத் ஜோஷி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து தேசபக்தியைக் கற்றுக்கொண்டார் என்றால், அதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது. தலித்துகள், ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதே அரசியலமைப்புச் சட்டம், ஒரு பிராமணருக்கும் அதிகாரமளிக்கிறது. பிராமணியத்தை இழிவுபடுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது. சூத்திரர்களை இழிவுபடுத்துவதும் அரசியலமைப்புக்கு எதிரானது.
இன்று பதஞ்சலி குருகுலம் மற்றும் ஆச்சார்ய குலத்தில் பயிலும் மாணவர்கள், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் ஆகியோருக்கு பூணூல் அணிவிக்கும் சடங்குகள் நடைபெறுகின்றன. இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள், பிராமண சமூகத்தினருக்கு மட்டுமே பூணூல் அணிய உரிமை உண்டு என்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். ஆனால், இங்கு அனைத்து சாதி, வர்க்கம், சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பூணூல் அணிகிறார்கள்.
வரும் காலங்களில் நாட்டுக்கு சரியான நிர்வாகத் தலைமை கிடைக்கும். ஒருவேளை நிர்வாகத் தலைமை ஏதேனும் காரணத்தால் தோல்வியுள்ளாலும் கூட - அரசியல் தலைமை, சமூகத் தலைமை, பொருளாதாரத் தலைமை என யாராவது ஒருவர் சமூகத்தை வழி நடத்துவா்கள். அதன்மூலம், இந்தியா இழந்த பெருமையை நாம் மீட்டெடுப்போம்.” என தெரிவித்தார்.