ஜோர்ஹாட்: அசாம் தேர்தலில் நேற்று வாக்களித்த மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், தேர்தலுக்குப் பிறகு வலிமையான புதிய அசாம் உருவாகும் என்று தெரிவித்தார்.
அசாம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கவுரவ் கோகோய், ஜோர்ஹாட் நகரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது தாயார் டாலி கோகோயுடன் சென்று வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாநிலத்தின் எதிர்காலத்துக்காக மக்கள் ஒரு தீர்க்கமான பங்கு வகிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வலிமையான, அச்சமற்ற, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் புதிய அசாம் உருவாகும். மாநிலத்தில் அமையவிருக்கும் புதிய அரசு அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும்” என்றார்.
இப்போது அசாம் மாநிலம் ஜோர்ஹாட் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள கவுரவ் கோகோய், மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில், இவர் ஜோர்ஹாட் சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, அனைத்து வாக்காளர்களும் பெருமளவில் வந்து, தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு உரிமைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.