கவுரவ் கோகோய்
குவாஹாட்டி: “அசாம் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன?” என்று பாஜக அரசை நோக்கை கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கவுரவ் கோகோய்.
அசாம் மாநிலத்தில் வரும் ஏப்.9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையில் இருவேறு கூட்டணிகள் உள்ளன. இதில் மாநில அளவிலான அரசியல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதோடு வேறு சில கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன. மொத்தம் 2.49 கோடி வாக்காளர்கள் அசாம் மாநிலத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தமாக 126 பேரவைத் தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய், “கடந்த பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி அசாம் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. இந்த பத்து ஆண்டுகாலமாக டபுள் இன்ஜின் ஆட்சிதான் மாநிலத்தில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும் சூழலில் மாநிலத்தில் ஊடுருவல் இன்னும் நடைபெறுவதற்கான காரணம் என்ன? கால்நடைகள் கடத்தப்படுவது ஏன்? போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இயங்குவது எப்படி? இந்த விவகாரம் சார்ந்து மாநில அரசு என்ன செய்துள்ளது என்பதை அறிய விரும்புகிறோம்” என கேட்டுள்ளார்.
முன்னதாக, சட்டவிரோத ஊடுருவல் விவகாரம் தங்கள் மாநிலத்தை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என பாஜக குற்றச்சாட்டு வைத்து வருகிறது.
இந்த சூழலில் கவுரவ் கோகோய் இந்த கேள்வியை எழுப்பி உள்ளார். அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கத்தில் பாஜக இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதை வெளிப்படுத்தும் விதமாக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசி வருகிறார். ”அசாம் மாநில மக்கள், இளைஞர்களின் ஆதரவு நிச்சயம் எங்களுக்குதான்” என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.