புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, பாங்காக்கில் இருந்து வந்த 2 தாய்லாந்து நாட்டவரிடம் சுமார் ரூ.48 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பொருட்களில், சுமார் 29 கிலோ எடையுள்ள 4 பாக்கெட்கள் ஒரு பயணியின் பையில் இருந்தும், சுமார் 19 கிலோ எடையுள்ள 2 பாக்கெட்கள் 2-வது பயணியின் பையில் இருந்தும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மொத்த எடை 47.805 கிலோ. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.48 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபகாலங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போதைப் பொருள் வேட்டைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஹைட்ரோபோனிக் என்பது மண்ணுக்குப் பதிலாக, ஊட்டச்சத்துகள் நிறைந்த நீரில் வளர்க்கப்படும் வீரியம் மிக்க ஒரு வகையான கஞ்சா ஆகும்.