விஜயவாடா: ஆந்திராவின் என்.டி.ஆர் மாவட்டம், ஆள்ளூருபாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு (55). இவர் சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றி, கம்மம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கடேஸ்வருலுவின் உடல் நிலை மோசமானதால், அவர் கோமா நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். மருத்துவர்கள் கைவிரித்ததால் ஆள்ளூரு பாடு கிராமத்தில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உற்றார், உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். வீட்டின் முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும் வைக்கப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்ட உடலை இறக்கும்போது, வெங்கடேஸ்வருலுவுக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. உயிரோடு இருக்கும்போதே இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்ததை நினைத்து வருந்திய உறவினர்கள், அதே ஆம்புலன்ஸில் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விஜயவாடா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வெங்கடேஸ்வருலு உயிரிழந்துவிட்டார். பின்னர் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிரிழப்பை உறுதி செய்தனர். இதனிடையே இறுதிச் சடங்குக்கு வந்திருந்த உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். அவர்களை மீண்டும் அழைத்து வெங்கடேஸ்வருலுவுக்கு நேற்று இறுதி சடங்குகள் நடைபெற்றன.