இந்தியா

மும்பையில் 10 ‘போலி ஊழியர்கள்’ பெயரில் மோசடி: காவல் துறையில் ரூ.6.41 கோடி சம்பள முறைகேடு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை காவல் துறையில் 10 நபர்களைப் போலி ஊழியர்களாகச் சேர்த்து, ரூ.6.41 கோடியை ஊதியமாகப் பெற்று முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

மும்பை காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய ‘சேவார்த்’ சம்பள போர்ட்டலில் இருந்து தரவுகள் புதிய மென்பொருள் தளத்திற்கு பதிவேற்றம் செய்யப்பட்டது. அப்போது, ஊழியர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்து மாற்றியபோது, 10 நபர்கள் போலி ஊழியர்களாக சேர்க்கப்பட்ட தில்லுமுல்லு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு காலக்கட்டத்தில் காவல் துறை ஊழியர்கள் அல்லாத 10 நபர்களின் பெயர்கள் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் மூலம் அவர்களின் வங்கி கணக்குகளுக்குத் தொடர்ச்சி யாக மாதச் சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் ரூ.6.41 கோடிக்கு சம்பள முறைகேடு நடைபெற்றுள்ளது.

ராம்தாஸ் போகலே, சுதாகர் கதாம், சர்ஜு யாதவ், பகவத் போசலே, குணாஜி கவ்கர், மகாதேவ் ஹல்தான்கர், ராஜேந்திர சோனார், உத்தம் தோரட், சூர்யகாந்த் பாட்டீல் மற்றும் பாண்டுரங் கதாம் ஆகிய 10 போலி பெயர்களில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.காவல் துறை் அமைச்சகப் பிரிவில் பணியாற்றிய அலுவலர்களும் கிளர்க்குகளும் கூட்டுச் சதி செய்து, போலி ஊழியர்களின் பெயர்களை வருகைப் பதிவேடு மற்றும் ஆவணங்களில் சேர்த்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடந்த காலகட்டத்தில் பதவியில் இருந்த முன்னாள் நிர்வாக அலுவலர்களான ராம்கிஷன் கோஸ்வாமி, நாகேஷ் தளவடேக்கர், விஜயா சவான் மற்றும் முதன்மை எழுத்தர் அஜய் ரத்தோடு, மூத்த எழுத்தர் அமோல் மேஷ்ராம் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலியான சர்வீஸ் ஐடி மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட ஐடி உருவாக்கி முறைகேடாகச் சம்பளம் வழங்கி வந்த விஜயா சவான் மற்றும் அமோல் மேஷ்ராம் ஆகிய இருவரை மும்பை காவல்துறை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.

SCROLL FOR NEXT