இந்தியா

4 தலைமுறைக்கு நீடித்த நிலத் தகராறு: 59 ஆண்டுக்குப் பின்னர் முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 4 தலைமுறைகளாக நீடித்து வந்த நிலத்தகராறு வழக்கு, 59 ஆண்டுகளுக்குப் பின்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் முடிவுக்கு வந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் கிராமத்தில் 15.5 பிகா பரப்பு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 1957-ல் வாங்கப்பட்ட இந்த நிலம் தொடர்பான வழக்கு விசாரணை 4 தலைமுறையாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்மையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த நிலத்தை சராபத் அலி என்பவரின் முன்னோர்கள் 1957-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி விற்பனைப் பத்திரம் மூலம் வாங்கியுள்ளனர். ஆனால் சராபத் அலியின் உறவினர்களில் பலர் அதற்குச் சொந்தம் கொண்டாடி வழக்கு தொடுத்தனர். கடந்த 1957-ல் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்தத் தகராறு எழுந்தது. இதை எதிர்த்து சராபத் அலியின் முன்னோர்கள் சிலர் வழக்கில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், 1957-ல் கையெழுத்திடப்பட்ட விற்பனைப் பத்திரத்தை உறுதி செய்வதன் மூலம், 70 ஆண்டுகள் பழமையான நிலத் தகராறுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்வு கண்டது. ஒரு குடும்பத்தின் 4 தலைமுறையினர் 7 தசாப்தங்களுக்கும் மேலாக இந்தச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் பிரச்சினையே இருந்தது. இந்நிலையில் 1957-ல் பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரம் செல்லும் என்றும், சராபத் அலி இந்தச் சொத்தை அனுபவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் 70 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளித்த பாரு என்பவர் தனது வாக்குமூலத்தில் தனது இருப்பிடத்தை நசிர்பூர் கலன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் விற்பனைப் பத்திரத்தின் சான்று செய்யப்பட்ட நகலில் அவர் தனது இருப்பிடத்தை நிஹந்த்பூர் சுதாரி என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் விற்பனைப் பத்திரச் செயல் முறை முறையாக நிரூபிக்கப்படவில்லை என்று கருதப்பட்டது.

ஜூன் 4, 1957 தேதியிட்ட விற்பனைப் பத்திரத்தைச் செல்லாததாகக் கருதியதும், சாட்சி தொடர்பான முக்கியமற்ற முரண்பாடுகளின் அடிப்படையில் அதை நிராகரித்ததும் உயர் நீதிமன்றம் மற்றும் நில ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் வெளிப்படையான தவறு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழக்கை நிறைவு செய்தது.

அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார் அதிபர் டொனால்டு ட்ரம்ப்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ தகவல்

SCROLL FOR NEXT