புதுடெல்லி: ஐ.நா.வில் இந்தியாவின் சார்பில் பணியாற்றி வந்தவர் ரூ.2 கோடி மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. அலுவலகம் உள்ளது. இங்கு இந்தியாவின் நிரந்தர தூதுவர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் மோகித் என்பவர் கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி தான், உதவி பிரிவு அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
இங்கு உணவு, போக்குவரத்து போன்ற பல்வேறு பணிகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை கையாளும் பொறுப்பு மோகித்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, யூனியன் பேங்க் ஆப் சுவிட்சர்லாந்து வங்கியில் உள்ள இந்திய கணக்கில் இருந்து பல்வேறு பணிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். அந்த பணம் அமெரிக்க டாலராக அல்லது சுவிஸ் பிராங்க் கரன்சியாக பரிமாற்றம் செய்யப்படும்.
பணம் வழங்க வேண்டியவர்களுக்கு கியூஆர் கோடு மூலம் இந்திய வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், பல்வேறு பணிகளுக்கான கியூஆர் கோடுகளில் மோகித் முறைகேடு செய்தது தணிக்கையின்போது தெரிய வந்தது.
விசாரணையில், கியூஆர் கோடுகளை மாற்றி,தனது வங்கிக் கணக்கில் மோகித் பணம் பெற்று வந்துள்ளார். அப்படி ரூ.2 கோடிக்கு மேல் அவர் பணம் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், இந்திய வங்கிக் கணக்கில் இருந்து எடுத்த பணத்தை மோகித் கிரிப்டோ சூதாட்டத்தில் செலவிட்டது தெரிய வந்துள்ளது. பணத்தை கையாடல் செய்ததை மோகித் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து மோகித் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்பட்டனர். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.