டெல்லியில் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய் பானு சிப் நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அரை நிர்வாண போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப்புக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘பாரத் மண்டபத்தில் தேசிய அவமானம்' என்ற தலைப்பில் முன்னாள் நீதிபதிகள், ஐபிஎஸ், ராணுவ அதிகாரிகள் உட்பட 277 பேர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இளைஞர் காங்கிரஸார் நடத்திய சட்டையில்லாத போராட்டம் நாட்டின் மாண்புக்கு செய்யப்பட்ட துரோகம்.
அதுவும் உலக முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த நிகழ்வில் நாட்டை அவமதிக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்த போராட்ட நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் மீது அக்கறையுள்ள குடிமகன்களாக இத்தகைய போராட்டத்தை கண்டிக்கிறோம். இதுபோன்ற அரசியல் பண்பாட்டை நிராகரிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.