புதுடெல்லி: “முன்னாள் ராணுவத் தலைவர் எம்.எம்.நரவனே டிசம்பர் 2023 வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் தனது 'நினைவுக் குறிப்பு' புத்தகம் இப்போது கிடைக்கிறது என்று மக்களுக்குத் தெரிவித்தார். ஆனால், புத்தக வெளியீட்டாளர் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இன்னும் அந்தப் புத்தகம் வெளியாகவில்லை என்று சொல்கிறது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் லடாக்கில் சீன ஊடுருவல் குறித்து முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனேவின் ‘நினைவுக் குறிப்பு’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். அதற்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘வணக்கம் நண்பர்களே... எனது புத்தகம் இப்போது கிடைக்கிறது. இந்த இணைப்பைப் பின்தொடரவும். மகிழ்ச்சியான வாசிப்பு. ஜெய் ஹிந்த்’ என்று தெரிவித்த நரவனேவின் சமூக எக்ஸ் பதிவை படித்துக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இதுதான் நரவனே சொன்ன ட்வீட்... நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நினைக்கிறேன், அல்லது பெங்குயின் பொய் சொல்கிறது.
பெங்குயின் புத்தகம் வெளியிடப்படவில்லை என்று கூறுகிறது. தயவுசெய்து என் புத்தகத்தை வாங்குங்கள் என்று ஜெனரல் நரவனே ட்வீட் செய்துள்ளார். அவர் இதை 2023-இல் ட்வீட் செய்தார். நரவனேவை விட பெங்குயினை நீங்கள் நம்புகிறீர்களா? நரவனேவை நான் நம்புகிறேன்.
வெளிப்படையாக, பெங்குயின் உண்மையைச் சொல்கிறதா அல்லது முன்னாள் ராணுவத் தளபதி உண்மையைச் சொல்கிறாரா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதுதான் பிரச்சினை. அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் "சவுகரியமற்ற" சில தகவல்களை நரவனே புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்" என்று அவர் மேலும் கூறினார்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேவின் ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி என்ற நினைவுக் குறிப்பின் பிரத்யேக வெளியீட்டு உரிமையை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா (PRHI) கொண்டுள்ளது.
இந்தப் பதிப்பகம், ‘ நரவனேவின் புத்தகத்தின் எந்தப் பிரதிகளும் அச்சு அல்லது டிஜிட்டல் வடிவத்தில் வெளியிடப்படவில்லை. தற்போது புழக்கத்தில் உள்ள இப்புத்தகத்தின் பிடிஎப் அல்லது ஆன்லைன் பிரதிகள் உட்பட எந்த வடிவமும், பதிப்புரிமை மீறலுக்குச் சமமாகும்” என்று தெளிவுபடுத்தியுள்ளது.
நரவனே புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை டிஜிட்டல் மற்றும் பிற வடிவங்களில் சட்டவிரோதமாகப் பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக டெல்லி காவல் துறை சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த பின்னர் இந்த விளக்கம் வந்தது கவனிக்கத்தக்கது.