அயோத்தி ராமர் கோயில்
புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் புதிய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கும் பணியை உ.பி. அரசு தொடங்கியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து விசாரணை நடத்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத்திடம் கடந்த ஜூன் 13-ம் தேதி ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கோரிக்கை விடுத்தது. இதையடுத்து லக்னோ மண்டல ஆணையர் விஜய் விஸ்வாஸ் பந்த் தலைமையில் மூன்று பேர் கொண்ட எஸ்ஐடி-யை உ.பி. அரசு அமைத்தது.
எஸ்ஐடி தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் திருட்டு நடந்ததை உறுதி செய்தது. இதன் அடிப்படையில் ஜூன் 23ம் தேதி அயோத்தியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், காணிக்கை திருட்டு வழக்கில் புதிய எஸ்ஐடி அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் புதிய எஸ்ஐடி அமைக்க தலைமை நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை, விசாரணையை ஒரு தீர்க்கமான கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இதன் அடிப்படையில் காணிக்கை திருட்டு குற்றவியல் வழக்கை விசாரிக்க தற்போது, புதிய எஸ்ஐடி அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தப் புதிய சிறப்பு புலனாய்வுக் குழுவில், டிஐஜி மற்றும் எஸ்.பி. நிலையிலான அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் குழுவில் இடம்பெற்றிருந்த லக்னோ மண்டல ஐஜி கிரண் இதிலும் சேர்க்கப்படுவார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 27-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.