நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. அங்கு 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் 9 பெண் ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நாசிக் காவல் ஆணையர் அலுவலகத்தில் ரகசியமாக புகார் மனுக்களை அளித்தனர்.
அதில், டிசிஎஸ் அலுவலகத்தின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் கும்பலாக செயல்பட்டு பெண் ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், லவ் ஜிகாத் பெயரில் கட்டாய மதமாற்றம் செய்தாகவும் குற்றம் சாட்டினர்.
7 பேர் கைது
இந்த புகார்களை விசாரிக்க நாசிக் காவல் ஆணையரகம் சார்பில் 7 பெண் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்களாக பணியில் சேர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட மூத்த அதிகாரிகளின் நடவடிக்கைகளை 40 நாட்கள் வரை ரகசியமாகக் கண்காணித்தனர். அப்போது டிசிஎஸ் பெண் ஊழியர்கள் அளித்த புகார் மனுக்கள் உண்மை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 9 பெண் ஊழியர்கள் அளித்த புகார் மனுக்களின்பேரில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன்பேரில் நாசிக் டிசிஎஸ் அலுவலக மூத்த அதிகாரிகள் தவுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன், ஷாரூக் குரேசி, ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக், பெண் ஊழியர் அஸ்வினி சனானி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். மனித வள மேம்பாட்டு அதிகாரி நீடா கான் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாசிக் காவல் ஆணையரகம் சார்பில் 12 உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு டிசிஎஸ் அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.
மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை
மேற்குவங்க தேர்தலையொட்டி மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கொல்கத்தாவில் நேற்று பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறும்போது, “நாசிக் கார்பரேட் லவ் ஜிகாத் விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இதில் தொடர்புடையவர்கள் யாரும் தப்ப முடியாது.
இந்த சதியின் பின்னணியில் இருக்கும் அனைவரையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனையை பெற்றுத் தருவோம். இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியை கோரி உள்ளோம்’’ என்று தெரிவித்தார். நாசிக் டிசிஎஸ் அலுவலகம் மூடப்பட்டு 150 ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் கூறும்போது, “போலீஸாரின் விசாரணைக்கு டிசிஎஸ் நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தவறிழைத்த ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக எங்கள் நிறுவனம் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தார்.
குல்ஷனாக மாறிய கோபால்
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கோபால் என்பவர் பணியாற்றி வந்தார். தவுசிப் அத்தர் தலைமையிலான கும்பல் அவரை மூளைச் சலவை செய்து மதம் மாறச் செய்துள்ளனர். இதன்பிறகு அவரது பெயர் குல்ஷன் என்று மாற்றப்பட்டு உள்ளது. இதேபோல கிருஷ்ணா என்ற ஊழியரும் மூளைச் சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் ஏராளமான ஆண், பெண் ஊழியர்கள் மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அலுவலக நேரத்தில் தொழுகை நடைபெற்றிருக்கிறது. மேலும் நாசிக் அலுவலகத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
78 புகார் மனுக்கள்
இதுதொடர்பாக நாசிக் போலீஸார் கூறியதாவது:
நாசிக் நகரின் டிசிஎஸ் அலுவலகத்தில் 18 வயது முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள் குறிவைக்கப்பட்டு உள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். திருமண ஆசை காட்டி பல பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள், நிறுவனத்தின் மனித வள அதிகாரிகளாக பணியாற்றிய நீடா கான், அஸ்வினி சனானி ஆகியோரிடம் இ-மெயில் வாயிலாக புகார் அளித்துள்ளனர். மொத்தம் 78 புகார் மனுக்கள் இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. ஆனால் நீடா கானும், அஸ்வினி சனானியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலுவலகத்தில் இதெல்லாம் சாதாரணம் என்று கூறி பாலியல் வன்கொடுமை விவகாரங்களை முழுமையாக மூடி மறைத்துள்ளனர்.
ஒன்பது பெண்கள் மட்டும் துணிச்சலாக நாசிக் காவல் ஆணையரகத்தை அணுகினர். அவர்களின் பாதுகாப்பு கருதி பெண் போலீஸ் அதிகாரிகள், டிசிஎஸ் அலுவலகத்தில் துப்புரவு ஊழியர்களாக சேர்ந்து புலன் விசாரணை நடத்தி ஒட்டு மொத்த கும்பலையும் பிடித்துள்ளனர். வழக்குக்கு முக்கிய ஆதாரமாக டிசிஎஸ் அலுவலக சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளன.
இந்த வழக்கின் முழுமையான விவரங்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தீவிரவாத தடுப்பு போலீஸாரிடம் அளிக்கப்பட்டு உள்ளது. மதமாற்ற கும்பலின் ஆணிவேரை கண்டறிய என்ஐஏ உதவியை கோரியுள்ளோம். நாசிக் வழக்கை என்ஐஏ-க்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்படும்.
தலைமறைவாக உள்ள மனித வள மேம்பாட்டு அதிகாரி நீடா கான், முன்ஜாமீன் கோரி நாசிக் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கர்ப்பமாக இருப்பதால் கருணை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்க அவர் கோரியுள்ளார். இதற்கு போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு நாசிக் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஊழியர் வாக்குமூலம்
பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கடந்த சில ஆண்டுகளாக நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறேன். மூத்த அதிகாரி டேனிஷ் ஷேக் என்னுடன் நட்பாக பழகினார். கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டில் அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். எனது விருப்பத்துக்கு மாறாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி முஸ்லிம் மதத்துக்கு மாற வலியுறுத்தினார். ஆனால் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலக முயற்சி செய்தேன். ஆனால் டேனிஷ் ஷேக் தொடர்ந்து பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்தார். மதம் மாறும்படியும் கட்டாயப்படுத்தினார்.
இதற்கிடையில் டேனிஷ் ஷேக்கின் நண்பர் தவுசிப் அத்தரும் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அவரது விருப்பத்துக்கு இணங்கவில்லை என்றால் டேனிஷ் ஷேக்கும் நானும் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக டிசிஎஸ் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறுவழியின்றி காவல் துறையில் புகார் அளித்தேன். தற்போது ஒட்டுமொத்த கும்பலும் போலீஸில் சிக்கி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.
பெண்களை ஓட்டலுக்கு அழைத்த அதிகாரிகள்
நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் மத மாற்றங்களுக்கு அந்த அலுவலகத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றி தவுசிப் அத்தர் மூளையாக செயல்பட்டு உள்ளார். மனித வள மேம்பாட்டு அதிகாரி நீடா கான் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளார். அலுவலக பணி நேரத்தில் தவுசிப் அத்தர், இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார்.
இந்து பெண்கள் குங்குமம் பூசுவதை எதிர்மறையாக விமர்சித்து உள்ளார். மேலும் தவுசிப் அத்தர், டேனிஷ் ஷேக், ரசா மேமன் உள்ளிட்டோர் இளம்பெண்களிடம் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டு உள்ளனர். சில பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்கி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
விருந்து என்ற பெயரில் பெண் ஊழியர்களை ஓட்டலுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துள்ளனர். விருந்தில்பங்கேற்கவில்லை என்றால் பணிநீக்கம் செய்வோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். நிர்பந்தம் காரணமாக ஓட்டலுக்கு சென்ற இந்து பெண்களை, வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சியை சாப்பிட செய்துள்ளனர். பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று நாசிக் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.