புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரசின் பெயர் மற்றும் அதன் சின்னத்தைப் பயன்படுத்த அக்கட்சியின் இரு பிரிவுகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், ‘முதலில் சிவசேனா, பிறகு தேசியவாத காங்கிரஸ், இப்போது திரிணமூல் காங்கிரஸ்.
ஒவ்வொரு முறையும் அதே பாணிதான். ஒரு கட்சியைப் பிளவுபடுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோக்கின்றன. பின்னர், அக்கட்சியின் தேர்தல் சின்னம் பறிக்கப்படுகிறது.
ஒரு முழு கட்சியையே அபகரிக்க முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளும் திருடப்படக்கூடும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
வாக்குத் திருட்டு, அரசுத் திருட்டு. இப்போது கட்சித் திருட்டு. இவை அனைத்தும் நமது ஜனநாயக சரிவின் அடையாளங்களாக மாறிவிட்டன.
மக்களின் தீர்ப்பை பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு சார்ந்த கடமை. ஆனால், அதற்கு மாறாக, மக்களின் தீர்ப்பை தலைகீழாக மாற்றம் சக்திகளுக்கே அது துணை நிற்கிறது.
இந்தப் போராட்டம் மம்தா பானர்ஜியுடையது மட்டுமல்ல. சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்குமான போராட்டம் இது’ என தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைக்கு எதிராக உள்கட்சி போராட்டம் வெடித்தது.
சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் சுமார் 60 எம்எல்ஏ-க்கள் ஒன்றிணைந்து, தாங்களே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என கூறி, தங்கள் தரப்புக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரினர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று மேற்கு வங்க சபாநாயகர், ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்தார். அதனைத் தொடர்ந்து ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவினர், கடந்த ஜூன் மாத இறுதியில் மம்தா பானர்ஜியைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அருப் ராயை புதிய தலைவராக அறிவித்தனர்.
நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இரு பிரிவினரும் திரிணமூல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்துக்கு உரிமை கோரினர்.
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அல்லது ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவோ அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற பெயரையோ அதன் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
மேலும், செப்டம்பர் 18 காலை 11 மணிக்குள் இரு தரப்பும் தங்களின் புதிய அமைப்புகளுக்கான மூன்று மாற்றுப் பெயர்கள் மற்றும் மூன்று சுயேச்சை சின்னங்களின் விருப்பப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி, இரு தரப்பும் புதிய கட்சிப் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறித்த விருப்பப் பட்டியலை சமர்ப்பித்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரும், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு ‘ஜனநாயக திரிணமூல் காங்கிரஸ்’ என்ற பெயரும் ஒதுக்கப்படுகிறது.
இதேபோல், மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸுக்கு கால்பந்து வீரர் சின்னமும், ஜனநாயக திரிணமூல் காங்கிரஸுக்கு உறை (Envelope) சின்னமும் ஒதுக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.