புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணி இன்று தொடங்குகிறது.
பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டில் நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு 2021ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கரோனா பெருந்தொற்று காரணமாக கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டது.
இந்த சூழலில் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்ட பணி இன்று தொடங்குகிறது. இதற்காக 33 கேள்விகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வீட்டின் உரிமையாளர் யார் ? வீட்டில் எவ்வளவு அறைகள் உள்ளன ? எத்தனை இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் உள்ளன ? எவ்வளவு தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், மடிக்கணினிகள் உள்ளன என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
இந்த 33 கேள்விகளுக்கான விவரங்களை பொதுமக்கள் அளிக்க வேண்டும். மேலும் இந்திய பதிவுத் துறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் சார்பில் சிறப்பு இணைய தளம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த இணையம் வாயிலாக பொதுமக்கள் தாங்களாகவே சுய விவரங்களைப் பதிவு செய்யலாம். செப்டம்பர் 30ம் தேதி வரை முதல்கட்ட பணிகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை 17ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்ட பணி தொடங்குகிறது. இதன்படி பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை ஜூலை 31ம் தேதி வரை இணையத்தில் பதிவிடலாம். ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி அரசு அலுவலர்கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்ட பணிகள் நிறைவு பெற்ற பிறகு 2027 பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2ம் கட்ட பணிகள் தொடங்கப்படும்.