இந்தியா

ஆந்திராவில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

வேட்டையன்

அனகாபல்லி: ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 18189-ன் பி-1 மற்றும் எம்-2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ பரவியது. இதனால் அந்த பெட்டிகள் பெருத்த சேதமடைந்தன. இதை ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதில் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாலை 1.11 மணி அளவில் டாடாநகர் - எர்ணாகுளம் சந்திப்பு அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை கவனித்த அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையின் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்திய காரணத்தால், பயணிகள் ரயிலில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது. தீ பற்றிய இரண்டு ரயில் பெட்டிகளில் ஒன்றில் 82 பயணிகளும், மற்றொன்றில் 76 பயணிகளும் இருந்ததாக தகவல்.

தீ பற்றிய இரண்டு பெட்டிகளும் டாடாநகர் - எர்ணாகுளம் சந்திப்பு அதிவிரைவு பயணிகள் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. மூத்த ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் உயிர் சேதம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதற்கிடையே, இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அனகாபல்லி மாவட்ட எஸ்பி துஹின் சின்ஹார் உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT