டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர்.
புதுடெல்லி: டெல்லியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், இறந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தென்மேற்கு டெல்லி, பாலம் ரயில் நிலையம் அருகில் ராம் சவுக் மார்க்கெட் பகுதியில் 4 மாடி கட்டிடம் உள்ளது. இதன் அடித்தளம், தரை தளம் மற்றும் முதல் தளத்தில் ராஜேந்தர் காஷ்யப் என்பவர் துணி மற்றும் அழகு சாதனப் பொருட்கள் கடை நடத்தி வந்துள்ளார். கட்டிடத்தின் மேல் தளங்களில் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கட்டிடத்தில் நேற்று காலை 7 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். சுமார் 30 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். மேலும் பலரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 3, 6, 15 வயதுடைய 3 சிறுமிகள் உட்பட 9 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர். மேலும் 2 வயது சிறுமி உட்பட 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டிடத்தில் தீப்பற்றியதும் 2 பேர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். அவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தீ விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவித் தொகையும் வழங்கப்படும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என அறிவித்துள்ளார். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரூ.10 லட்சம் நிவாரணம்: தீயில் 9 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த முதல்வர் ரேகா குப்தா, உயிரிழந்த பெரியவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்
நிவாரணம் வழங்கப்படும் என்றும் சிறுமிகளின் குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ரேகா குப்தா அறிவித்தார்.