பெல்லட் குண்டு தாக்குதல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் டெல்லி நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் நேற்று பாதிக்கப்பட்ட மாணவர் சாஹில் லோச்சாபுடன் தர்ணாவில் ஈடுபட்டார். உடன் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளனர். படம்: பிடிஐ

 
இந்தியா

மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் விவகாரம்: ராகுல் காந்தி தர்ணாவைத் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டெல்லி போலீஸ் நிலையத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் கலைந்து செல்ல பெல்லட் குண்டுகள் (ரப்பர் குண்டுகள்) பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் மாணவர்கள் சிலருடைய கண்கள், உடல்களில் பெல்லட் குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தென் மேற்கு டெல்லியைச் சேர்ந்த சாஹில் லோச்சாப் (19) என்ற மாணவர், பெல்லட் குண்டுகளால் படுகாயம் அடைந்தார். அவரது ஒரு கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் சாஹில் லோச்சாப் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் உள்ள நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையத்துக்கு நேற்று சென்றார். மாணவர் சாஹில் லோச்சாப் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தினார். இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற சாலை போலீஸ் நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். பிரியங்கா காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தர்ணாவில் பங்கேற்றனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடைபெற்ற போது கன்னாட் பிளேஸ் பகுதியில் போலீஸார் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

அப்போது மாணவர் சாஹிலின் உடலில் பெல்லட் குண்டுகள் துளைத்தன. அவரது உடலில் மொத்தம் 200 பெல்லட் குண்டுகள் பாய்ந்துள்ளன. இதில் 3 குண்டுகள் அவரது கண்ணை துளைத்திருக்கின்றன. இதன் காரணமாக அவர் பார்வையை இழந்துள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்திய போலீஸார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். அதுவரை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற மாட்டோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறும்போது, “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாகரிகமற்ற அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்று அவர் நாடகமாடுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. நீதித்துறை மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறும் போது, “வந்தே மாதரம் பாடலைக் காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்து உள்ளனர். இந்த பிரச்சினையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே ராகுல் புதிய நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

ராகுல் காந்தியின் 5 மணி நேர தர்ணாவுக்கு பிறகு அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.

SCROLL FOR NEXT