இந்தியா

இந்தியாவில் குறையும் கருவுறுதல் விகிதம் - விவரிக்கும் மத்திய அரசின் அறிக்கை

வேட்டையன்

புதுடெல்லி: மக்கள் தொகையை நிலையானதாக பராமரிக்கத் தேவையான கருவுறுதல் விகிதம் இந்தியாவில் குறைந்து வருவதாக மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளில் மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023-ல் சீனாவை மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா முந்தியது. கடந்த 1950-களில் இந்திய மக்கள் தொகை 36 கோடியாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இப்போது 145 கோடியாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதாக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நாட்டின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம், மக்கள் தொகை மாற்றீட்டுக்கான அளவுகோலாக (Relacement Benchmark) நிர்ணயிக்கப்பட்டுள்ள 2.1-க்கும் கீழே சென்றுள்ளது. அதுதான் இப்போது கருவுறுதல் விகிதம் குறித்து கவனம் பெற செய்துள்ளது.

மாற்றீட்டுக்கான அளவுகோல் என்றால் என்ன? - மக்கள் தொகை எண்ணிக்கை அடுத்த தலைமுறையினருக்கு மாறும்போது, அதை ஈடுசெய்யும் வகையில், ஒரு பெண் பெற்றிருக்க வேண்டிய சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிப்பதுதான் மாற்றீட்டுக்கான அளவுகோல்.

அந்த வகையில் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் அதற்கும் குறைந்து, அது நீண்ட காலத்துக்கு நீடித்தால், மக்கள் தொகை எண்ணிக்கை படிப்படியாக குறையும். ஒருவேளை கருவுறுதல் விகிதம் மாற்றீட்டுக்கான அளவுகோலை கடந்து உயரவில்லை என்றால் மக்கள் தொகை எண்ணிக்கையில் சரிவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன? - இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை அடுத்த 21 ஆண்டுகளில் அதன் உச்சத்தை எட்டும் என வாஷிங்டன் பல்கலைக்கழத்தின் சுகாதார நிறுவன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர்தான் மக்கள் தொகை எண்ணிக்கை இந்தியாவில் குறையும் என தங்களது அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் நூறு கோடியாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள எணிக்கையை காட்டிலும் சுமார் 50 கோடி குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிராந்திய ரீதியாகவும் இந்தியாவில் கருவுறுதல் விகிதம் மாறுபடுகிறது. நாட்டிலேயே பிஹார் மாநிலத்தில் கருவுறுதல் விகிதம் 2.9 என உள்ளது. தென் மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் கருவுறுதல் விகிதம் 1.3 என உள்ளது. நாட்டிலேயே மிக குறைவாக டெல்லியில் கருவுறுதல் விகிதம் 1.2 என உள்ளது.

ஒரு குழந்தை போதும் என எண்ணும் பெற்றோர்கள், கலாச்சார மாற்றம், நகர வாழ்க்கை உள்ளிட்ட குடும்ப வாழ்க்கையும் இதற்கான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கருவுறுதல் விகிதம் குறைவது குறித்து எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். அதில் படித்தவர்கள் மத்தியில் இந்தியாவின் பிறப்பு விகிதம் பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றீட்டுக்கான அளவுகோலுக்கு கீழே குறைந்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT