கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பெண்கள் சிலருடன் பேசுவது போன்ற வீடியோ கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து காவல் ஆணையரிடம் சித்தராமையா புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், காங்கிரஸ் பெண் நிர்வாகி கிருபா ஆல்வா, தனியார் சேனல் தலைவர் ராகேஷ் ஷெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் ரித்தேஷ் பாண்டே கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த்குமார் சிங், அந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போலியானது என்றும், சித்தராமையாவின் நற்பெயரைக் கெடுக்க முயற்சி நடந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கிருபா ஆல்வா காங்கிரஸிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு கிருபா ஆல்வா பதிலளிக்கவில்லை என்றும், அவர் திட்டமிட்டு வீடியோ தயாரித்தது போலீஸ் விசாரணையில் உறுதியானதால் நீக்கப்பட்டதாகவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத் கூறினார்.
சித்தராமையாவின் மகனும் அமைச்சருமான யதீந்திரா, தந்தை முதல்வராக இருந்தபோது கிருபா ஆல்வாவுக்கு புத்தூர் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால் பழிவாங்கவே வீடியோவை உருவாக்கியதாக குற்றம்சாட்டினார்.