இந்தியா

ஆந்திரா: மகனின் புதிய பைக்கை தீயிட்டு கொளுத்திய தந்தை

செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் கல்லூரியில் சேரும்போது, தனக்கு புதிய பைக் வேண்டும் என தனது தந்தையை நச்சரித்துள்ளார். மகன் ஆசைப்படுகிறானே என சந்திரசேகரும் ரூ.1 லட்சத்துக்கும் அதிக விலையில், மாதத் தவணையில் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு மகனின் போக்கே மாறிவிட்டது. அடிக்கடி நண்பர்களுடன் பைக்கில் வெகு தூரம் செல்வது, போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுவது, அதிக வேகமாக செல்வது என மகன் செயல்பட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராத ரசீது அடிக்கடி தந்தையின் செல்போனுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் பைக்கில் மகன் வேகமாக சென்றதால் ஒரு விபத்தும் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த மகனுக்கு ரூ.1 லட்சம் வரை சந்திரசேகர் மருத்துவ செலவு செய்துள்ளார். அந்த பைக்கை பழுது நீக்க ரூ.20 ஆயிரம் செலவிட்டுள்ளார்.

மகன் குணமடைந்த பிறகும் அவரது போக்கில் எந்த மாற்றமும் ஏற்படாததால் சந்திரசேகர் ஆத்திரமடைந்தார். இதில் நேற்று அவர் தனது மகன் பைக்கை ஒரு மைதானத்தில் வைத்து, அதன் மீது பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். இது குறித்த தகவலின் பேரில் பெந்துர்த்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT