புதுடெல்லி: மகளின் பெயரில் சேமிக்கப்படும் நிதி அவரது எதிர்காலத்துக்கான மூலதனம் என்பதால், அதிலிருந்து தந்தை ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சுதிர் கவாத்ரா என்பவர், கடந்த 1999-ம் ஆண்டில் தனது மகள் ஷாம்லி பெயரில் ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்கைத் தொடங்கியுள்ளார். ஆனால், பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் மகள் ஷாமிலி தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிபிஎஃப் முதிர்வடைந்த நிலையில் பணத்தை எடுக்க ஷாமிலி வங்கியை அணுகியபோது, தனது தந்தை முழு தொகையையும் எடுத்ததுடன், கணக்கை மூடிவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை மீட்டுத் தரக்கோரி ஷாமிலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தன் தாய்க்கு நிதிச் சுமையை ஏற்படுத்துவதற்காக, தன் தந்தை வேண்டுமென்றே பிபிஎஃப் தொகையை எடுத்து விட்டதாகவும், அதனால், தற்போது கல்விக் கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் தான் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம், ஷாமிலியின் வைப்பு நிதியிலிருந்து எடுக்கப்பட்ட முழு தொகையையும் 8 சதவீத வட்டியுடன் வழங்க தந்தை சுதிர் கவாத்ராவுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுதிர் கவாத்ரா டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதிர் கவாத்ரா தரப்பில், இந்த வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் இருந்த தொகையைக் கொண்டு மனைவிக்கு கூடுதல் ஜீவனாம்சம் வழங்குவதாகவும், அந்தப் பணத்தை ஷாம்லியும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவின்படி ஜீவனாம்சம் வழங்குவது என்பது தந்தையின் சட்டப்பூர்வக் கடமை ஆகும். எனவே, ஜீவனாம்சத்தையும், வைப்பு நிதியையும் ஒன்றாகக் கருத முடியாது. மகளின் பெயரில் சேமிக்கப்படும் நிதி என்பது அவரது எதிர்காலத்துக்கான மூலதனம் என்பதால், அதிலிருந்து தந்தை ஜீவனாம்சம் வழங்க முடியாது. மேலும், வருங்கால வைப்பு நிதிக்கான முதலீடு தந்தையால் செய்யப்பட்டிருந்தாலும், கணக்கு மகளின் பெயரில் உள்ளதால் முதிர்வுத் தொகை முழுமையாக மகளுக்கே சேரும்.
எனவே, தந்தை தான் செலுத்த வேண்டிய ஜீவனாம்சத் தொகையை, மகளின் வைப்பு நிதி கணக்கிலிருந்து வழங்க முடியாது என தீர்ப்பளித்தார். மேலும், பிபிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட முழுத் தொகையையும் 8 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்ற மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.