அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்த சோபியா (22) 3 மாதங்களுக்கு முன்பு, ஆண் நண்பர் ஒருவருடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகபரவியது.
இதனால் தனது குடும்பத்தின் கவுரவமும் மரியாதையும் சமூகத்தில் சீர்குலைந்துவிட்டதாகக் கருதிய சோபியாவின் தந்தை முகமது பாரூக் மற்றும் அவரது மூத்த சகோதரர் முகமது ஹாபில் ஆகிய இருவரும் சோபியாவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உள்ளனர்.
இதன்படி ஹாபில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு தனது ஆடைக்குள் இரும்புச் சுத்தியல் ஒன்றை மறைத்து வைத்துக்கொண்டு, தந்தையுடன் சேர்ந்து சோபியாவை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
பயணத்தின் வழியில் கேல்ஜிபுரா கிராமத்துக்கு அருகில் உள்ள தனிமையான மணல் பாதையில் இருசக்கர வாகனத்தைத் திருப்பிய ஹாபில், அங்கு சோபியாவின் தலையில் சுத்தியலால் மூன்று முறை கொடூரமாகத் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
உடனடியாக சோபியாவின் உடலை பிரதான சாலைக்குக் கொண்டு வந்து போட்டதுடன், வேகமாக வந்த வாகனம் மோதியது போல் சித்திரிக்க தங்களது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கி விபத்து நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினரைத் தொடர்பு கொண்ட அவர்கள், தங்களின் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அடையாளம் தெரியாத வாகனம் அதிவேகத்தில் மோதியதில் தங்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் சோபியா பலத்த காயமடைந்ததாகவும் கூறியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் படுகாயமடைந்த சோபியாவை மீட்டு சோலா சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். இதன்பின் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இளம்பெண்ணைக் கொன்று விபத்தென நாடக மாடிய தந்தை, சகோதரர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.