புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) தேர்தல் சின்னம் தான் வடிவமைத்தது. அதை திருடிவிட்டனர். மம்தா பானர்ஜி அரசுக்கு அஞ்சி இத்தனை வருடங்களாக மவுனம் காத்ததாக ஓவியக் கலைஞர் சோம்நாத் சவுத்ரி குற்றம் சுமத்தி மேற்கு வங்க அரசியலில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளார்.
காங்கிரஸிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கிய மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் சின்னம், புல்களின் இடையில் வளர்ந்த பூ. கட்சியின் பிரபலமான இந்தச் சின்னத்தை தாமே வடிவமைத்ததாக அதன் தலைவர் மம்தா அப்போது அறிவித்திருந்தார்.
ஆனால், அந்தச் சின்னத்தை வடிவமைத்தது மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல ஓவியரான சோம்நாத் சவுத்ரி என சர்ச்சை கிளம்பியுள்ளது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த முதல்வர் மம்தா சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தார்.
திரிணமூலிடமிருந்து பாஜக ஆட்சியைப் பறித்து முதல்வராக சுவேந்து அதிகாரி உள்ளார். இந்தச் சூழலில் அம்மாநில மூத்த ஓவியக் கலைஞர் சோம்நாத் சவுத்ரி, டிஎம்சியின் தேர்தல் சின்னம் மீது உரிமை கோரியுள்ளார்.
முழுநேர ஓவியக் கலைஞராக மாறிவிட்ட சோம்நாத் சவுத்ரி, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்.
இது குறித்து ஓவியக் கலைஞர் சோம்நாத் சவுத்ரி கூறுகையில், “கடந்த 1998-ல், காங்கிரஸின் மத்திய அமைச்சர் அஜித் பாஞ்சாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சின்னத்தை வடிவமைத்தேன் .
ஒரு புதிய அரசியல் கட்சிக்காக இந்த சின்னத்தை வடிவமைக்க என்னிடம் அவர் கேட்டிருந்தார். இருப்பினும், அந்தச் சின்னம் புதிதாகத் தொடங்கவிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கானது என்பதை, அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், கட்சியின் அறிமுகக் கூட்ட மேடையிலேயே, அந்தச் சின்னம் தனது சொந்தப் படைப்பு என்று மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். இதை தொலைக்காட்சி செய்தியில் கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்.
எனது கலைத்திறனும், அக்கட்சிக்காக நான் ஆற்றிய பங்களிப்பும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இதற்கு எதிராகப் போராடவோ அல்லது உண்மையை வெளிப்படுத்தவோ எனக்குத் துணிச்சல் ஏற்படவில்லை.
இந்த விவகாரத்தில் பகிரங்கமாகப் பேசினால், அது கடுமையான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் என அஞ்சி பல ஆண்டுகளாக மவுனம் காத்து வந்தேன்.” எனத் தெரிவிதுள்ளார்.
ஓவியக் கலைஞர் சோம்நாத்தின் புகார், மேற்கு வங்க அரசியலில் சர்ச்சைக் கிளப்பியுள்ளது. டிஎம்சி சார்பில் இதுவரை கலைஞர் சோம்நாத்தின் புகாருக்கு எந்தப் பதிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.