சென்னை: போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ஆன்லைனில் செலுத்துவதாக கூறி, போலி இணையதளங்கள் மூலம் மோசடி நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் ‘இ-சலான்’ மூலம் ஆன்லைனில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மோசடி கும்பல்கள் கைவரிசை காட்டி வருகின்றன. ‘இ-சலான்’ பட்டியலை இணையதளத்தில் இருந்து திருடும் இவர்கள், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை தொலைபேசி, வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு, ‘உங்கள் வாகனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ஆன்லைனில் செலுத்தி விடுகிறோம். அதற்காக சிறிய தொகையை கமிஷனாக கொடுத்தால் போதும்’ என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி வாகன ஓட்டிகள் செலுத்தும் பணத்தை சுருட்டி விடுகின்றனர். இதற்காக அரசு இணையதளம், கட்டண ரசீது போல போலி இணையதளம், ரசீதுகளையும் உருவாக்கி வாகன ஓட்டிகளை ஏமாற்றுகின்றனர்.
இதுதொடர்பாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி, போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி மேற்பார்வையில், இணை ஆணையர் பகலவன் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். சம்பந்தப்பட்ட இணையதளங்களில் குறிப்பிட்டிருந்த முகவரிகளின் அடிப்படையில் ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால், அவை போலி முகவரிகள் என தெரியவந்தது.
இதையடுத்து, இந்த இணையதளங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண, சைபர் குற்றப்பிரிவில் சென்னை போக்குவரத்து போலீஸார் புகார் அளித்துள்ளனர். இதன்படி, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (echallan.parivahan.gov.in) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தபால் நிலையங்கள், இ-சேவை மையங்கள் மூலமாக மட்டுமே அபராதத்தை செலுத்த வேண்டும். போலி இணையதளங்கள்
மூலம் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். இணையதளத்திலும் (www.cybercrime.gov.in) புகார் அளிக்கலாம் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.