புதுடெல்லி: புற்று நோய், கல்லீரல் நோய் மற்றும் இதர உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கான மருந்துகளை போலியாக தயார் செய்து நாடு முழுவதும் விற்ற 4 பேர் கும்பலை டெல்லியில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் மற்றும் அதன் தயாரிப்புக்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புற்று நோய், கல்லீரல் நோய் மற்றும் இதர உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கான மருந்துகளின் விலை மிக அதிகம். இதை ஒரு கும்பல் போலியாக தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளது.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் மணிப்பூரைச் சேர்ந்த மனோஜ் குமார் மிஸ்ரா. இவர் முதலில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறை மற்றும் முகக்கவசம் ஆகியவற்றை விற்கும் தொழிலில் ஈடுபட்டார். இத்தொழில் கடந்த 2022-ம் ஆண்டு நஷ்டம் அடைந்தது.
இதையடுத்து இவர் போலி மருந்துகளை தயாரித்து விற்கும் தொழிலில் ஈடுபட்டார். இதற்காக யுனைடெல் ஃபார்மா என்ற மருந்து நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன் மூலம் உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் பிரபல நிறுவனங்களின் மருந்துகளை போலியாக தயாரித்துள்ளார். அவை ஒரிஜினல் போல் தோற்றமளிப்பதற்காக, அதிநவீன பேக்கேஜிங் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்தி மருந்து வியாபாரிகளையும், நோயாளிகளையும் ஏமாற்றியுள்ளார்.
போலீஸார் நடத்திய சோதனையில், ரூ.10 கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் மற்றும் பேக்கேஜ் இயந்திரங்களை கைப்பற்றியுள்ளனர். போலி மருந்துகள் நாடு முழுவதும் எங்கெங்கு விற்பனை செய்யப்பட்டன என்ற விவரங்களை போலீஸார் கண்டறிந்து வருகின்றனர். போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட மனோஜ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.