இந்தியா

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய நெருக்கம் பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்ச நீதிமன்றம்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஓர் உறவு பிற்காலத்தில் முறிந்து போனதால், அதற்கு முன் பரஸ்பர சம்மதத்துடன் நிகழ்ந்த உடல் ரீதியிலான நெருக்கத்தை பாலியல் வன்கொடுமையாக முத்திரைக் குத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர், தனக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், ‘வேண்டுமென்றே செய்யப்படும் ஏமாற்று அல்லது மோசடி காரணமாக ஆரம்பத்தில் இருந்தே பாலியல் சம்மதம் செல்லாததாக இருக்கும் வழக்குகளுக்கும், ஓர் உறவு முடிவுக்கு வந்த பிறகு பரஸ்பர சம்மதத்துடன் கூடிய நெருக்கம் குறித்து பிற்காலத்தில் வருந்தும் வழக்குகளுக்கும் இடையே வேறுபாடு காண வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தகைய வழக்குகளில் ஓர் உறவு கசந்து, இனி உறவு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக, நல்ல உறவு இருந்த காலத்தில் நிகழ்ந்த உடல் ரீதியிலான நெருக்கத்தை பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமைச் செயலாக முத்திரைக் குத்த முடியாது.

தோல்வியுற்ற உறவு குறித்த வருத்தம், பரஸ்பர சம்மதத்துடன் கூடிய ஓர் உறவை குற்றச் செயலாக மாற்றிவிடாது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் சுதந்திரத்தையும் நற்பெயரையும் பறிக்கும் வகையில் குற்றவியல் நீதி அமைப்பை தூண்டிவிடாது.

பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவில் இருப்பது பிற்காலத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம், ஒருவரின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை பறித்துவிடுகிறது. இத்தகைய சூழலில் அந்த உறவில் இருந்து விலகிக்கொள்ள அந்த நபருக்கு உரிமை இல்லை என்று கூற முடியுமா? இந்த முடிவை ஏமாற்று அல்லது மோசடி என்று கூற முடியுமா? நிச்சயமாக முடியாது.

தோல்வியுற்ற உறவுகள் குற்ற வழக்குகளாக மாற்றப்படும் கவலைக்குரிய போக்கை நாங்கள் மீண்டும் மீண்டும் காண்கிறோம். பாலியல் வன்கொடுமை ஒரு கொடூரமான குற்றம். உண்மையான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மட்டுமே இந்த குற்றச்சாட்டை பயன்படுத்த வேண்டும்.

பரஸ்பர சம்மதத்துடன் ஏற்படும் ஒவ்வொரு உறவும் முறியும்போது, அது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டாக மாற்றப்படும்போது, அது கூறப்படும் குற்றத்தின் தீவிரத்தை குறைக்கிறது அல்லது குற்றச்சாட்டையே இல்லாமல் செய்துவிடுகிறது. எனவே, பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து சந்தோஷ் குமார் விடுவிக்கப்படுகிறார்’ என தீர்ப்பளித்தனர்.

சந்தோஷ் குமார் தனது முதல் திருமணத்தை மறைத்து, ஏற்கெனவே விவாகரத்து ஆன ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது என்று நம்ப வைத்து அந்த பெண்ணை ஏமாற்றி அவர் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண், சந்தோஷ் குமார் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT