பிரதிநிதித்துவப் படம்
புதுடெல்லி: பிஹாரில் ஹிஜாப், பர்தா உள்ளிட்டவை அணிந்து முகத்தை மூடிய படி வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை வியாபாரிகள் தடை விதித்துள்ளனர்.
நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே சமயம் நகைக்கடைகளில் தங்கம் திருட்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நகைத் திருட்டை தடுக்கும் பொருட்டு அகில இந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பின் (ஏஐஜேஜிஎப்) பிஹார் பிரிவு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
இதன்படி, முகத்தை முழுவதுமாக மூடிய படி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்வதும் அவர்களை கடைக்குள் அனுமதிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐஜேஜிஎப் கூட்டமைப்பின் பிஹார் மாநிலத் தலைவர் அசோக் குமார் வர்மா கூறும்போது,"பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நகைகள் மதிப்பு மிகுந்த பொருளாக மாறிவிட்டன. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.300-ஐ நெருங்கியுள்ளது. இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் ஹெல்மெட், முக்காடு, ஹிஜாப், பர்தா, நகாப் உள்ளிட் டவை அணிந்து வரும்போது சிக்கல் எழுகிறது.
இவர்கள் மூன்று, நான்கு பேர் கொண்ட குழுவாக நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. பல மாநிலங்களில், பர்தா அணிந்த கொள்ளையர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கடைக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவே இந்த புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முக்காடு, ஹிஜாப், நகாப், பர்தா உள்ளிட்டவற்றை அகற்றுவது எங்கள் நோக்கம் அல்ல. இவற்றை அணிந்துள்ள வாடிக்கையாளர்கள் கடைக்குள் வருவதற்கு முன்தங்கள் முகத்தை காட்ட வேண்டும் என்று கோருவதே எங்கள் நோக்கம்" என்றார். இந்த அறிவிப்புக்கு பிஹாரின் காவல் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.