கர்னூல்: ஆந்திராவின் கர்னூலில் உள்ள ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவின் கர்னூல் அருகேயுள்ள கொந்திவாரி கிராமத்தில் செயல்படும் ஆலையில் மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அங்கு பணியில் இருந்த தொழிலாளி நூர் முகமதுவை கைது செய்து விசாரணைக்காக ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து மத்திய புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “செகந்திராபாத்தைச் சேர்ந்த நூர் முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.
அவர் குறித்து சிறையில் இருக்கும் மற்றொரு தீவிரவாதி கொடுத்த தகவலின்படி செகந்திராபாத் மற்றும் கர்னூலில் நூர் முகமதுவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்தோம். அவரது தீவிரவாத பின்னணி உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவரை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தன.
கடந்த சில மாதங்களாக கர்னூல் ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வந்த நபர், தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது சக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.