கொல்கத்தா: வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், 19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தாவுக்கு வருகை தர உள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ள இலக்கிய விழா ஒன்றில் அவர் பங்கேற்க இருக்கிறார்.
'செக்யூலர் மிஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ்' (Secular Mission and Human Rights) மற்றும் 'பங்களாதேஷ் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் ஃபவுண்டேஷன்' (HRBFF) ஆகிய அமைப்புகள் ஆகஸ்ட் 1ம் தேதி இலக்கிய நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. கொல்கத்தாவின் ரவீந்திர சதனில் நடைபெற உள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவிருப்பதாக தஸ்லிமா நஸ்ரின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் உஸ்மான் மல்லிக் கூறும்போது, “ஆகஸ்ட் 1-ம் தேதி நிகழ்வுக்காக தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதி அளித்துள்ளார். அன்றைய தினம் முதல்வர் சுவேந்து அதிகாரியும், நிதி அமைச்சர் ஸ்வபன் தாஸ்குப்தாவும் மேடையில் இருப்பார்கள்” என தெரிவித்தார்.
மத அடிப்படைவாத எதிர்ப்பின் தீவிரமான குறியீடு தஸ்லிமா நஸ்ரின் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வர்ணித்துள்ளனர். ஆகஸ்ட் 2-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் தஸ்லிமா நஸ்ரின் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண் உரிமை மற்றும் மதம் சார்ந்த தனது எழுத்துகளுக்காக வங்கதேசத்தில் கடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட தஸ்லிமா நஸ்ரின், கடந்த 1994-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் குடியுரிமை பெற்ற அவர், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் வங்கத்துடனான தனது உணர்வுப்பூர்வமான பிணைப்பைப் பற்றி அவர் தொடர்ந்து பேசி வந்தார். தனது மொழி, கலாச்சாரம், இலக்கிய பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளும் நகரமாக கொல்கத்தா உள்ளதைக் குறிப்பிட்டு அங்கு தான் வாழ விரும்புவதாக வேண்டுகோள் விடுத்து வந்தார்.
இதையடுத்து, புதுப்பிக்கக்கூடிய வகையிலான வசிப்பிட அனுமதியை மத்திய அரசு கடந்த 2004-ம் ஆண்டு அவருக்கு வழங்கியது. இதையடுத்து, தஸ்லிமா நஸ்ரின் கொல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினார்.
மேற்கு வங்கத்திலும் வங்கதேசத்திலும் பகிரப்படும் இலக்கிய மரபுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். இதனால் மீண்டும் அவர் சர்ச்சையில் சிக்கினார். அவர் எழுதிய த்விகண்டிதோ என்ற புத்தகத்தை அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு தடை செய்தது. எனினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது.
அவரது எழுத்துகளுக்கு எதிராக 2007-ல் நடந்த போராட்டங்கள் தீவிரமடைந்து கலவரமாக மாறியதை அடுத்து, அவர் கொல்கத்தாவில் இருந்து ரகசியமாக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அரசின் பாதுகாப்போடு ரகசிய இடத்தில் அவர் தங்கவைக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் புதுடெல்லிக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, 2008-ல் இந்தியாவை விட்டு ஸ்வீடன் சென்ற தஸ்லிமா நஸ்ரின், பின்னர் நீண்ட கால விசாவில் இந்தியா திரும்பினார். எனினும், மேற்கு வங்க அரசு அவரை அனுமதிக்காததால் அவர் டெல்லியிலேயே தங்க வேண்டியிருந்தது. இந்நிலையில், 18 ஆண்டுகள், 8 மாதங்கள், 10 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் கொல்கத்தா திரும்ப உள்ளார்.