எம்எல்ஏ ஹுமாயூன் கபீர்
முர்ஷிதாபாத்: திரிணமூல் காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதிக்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று (டிச.6) தொடங்கியுள்ளார். இந்த நிகழ்வால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான இன்று மேற்கு வங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஹுமாயூன் கபீர் முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி பாணியிலான மசூதி கட்ட அழைப்பு விடுத்திருந்தார். இதனையடுத்து நேற்று முன் தினம் அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இருப்பினும், அவர் இன்று முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினார். இது தொடர்பான வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நிகழ்வுக்கு தடைவிதிக்க மறுத்ததுடன், சட்டம் ஒழுங்குக்கான முழுப் பொறுப்பையும் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்-12ன் இருபுறமும் விரைவு நடவடிக்கைப் படை (RAF), மாவட்ட காவல்துறை மற்றும் மத்தியப் படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறை, பெல்டங்கா, ராணிநகர் பகுதிகளில் பாதுகாப்பை மாநில அரசு பலப்படுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு பணியில் 3,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கபீர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, இந்த மாத இறுதியில் தனிக் கட்சி தொடங்குவதாகவும் கூறினார்.
பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழா: பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழாவுக்காக முர்ஷிதாபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை-12 க்கு அருகில் உள்ள வயல்களில் 150 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட மேடைகள், 400 விருந்தினர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வுக்கு சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு மதகுருமார்கள் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சிறப்பு வாகனத்தில் வருவார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விழாவுக்காக 3,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களில் 2,000 பேர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5, 2025) அதிகாலையில் பணியைத் தொடங்கினர். முர்ஷிதாபாத்தை தளமாகக் கொண்ட ஏழு கேட்டரிங் ஏஜென்சிகள் ஷாஹி பிரியாணி தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. விருந்தினர்களுக்கு 40,000 பொட்டலங்கள் மற்றும் வீடுகளுக்கு 20,000 பொட்டலங்கள் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உணவுச் செலவுகள் மட்டும் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கபீரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் மதிப்பிட்டுள்ளார். நிகழ்வுக்கான மொத்த பட்ஜெட் ரூ.70 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு குர்ஆன் ஓதுதல், நண்பகல் அடிக்கல் நாட்டு விழா, பிற்பகல் 2 மணிக்கு உணவு மற்றும் மாலை 4 மணிக்கு நிகழ்வு முடிவடையும் என காவல்துறை அறிவுறுத்தல்களின்படி பட்டியலிடப்பட்டுள்ளது.