புதுடெல்லி: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாவுக்காக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த இரண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர்கள் ஜனவரி 25 முதல் ஜனவரி 27 வரை இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகின்றனர். மேலும், அவர்கள் ஜனவரி 27 அன்று நடைபெறும் 16வது இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கும் இணைத் தலைமை தாங்குவார்கள்.
இந்த வருகையின் போது, ஐரோப்பிய ஆணையத் தலைவர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கோஸ்டா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பார்கள் என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட மற்றும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்படும் இந்திய-ஐரோப்பிய கவுன்சில் வர்த்தக மன்றத்திலும் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 2004 முதல் இணைந்து பணியாற்றி வருகின்றன. மேலும் இரு இந்தியா - ஐரோப்பிய யூனியனின் வர்த்தக ஒப்பந்தமும் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கு முன்பே இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இரு தரப்பினரும் மிக அருகில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.