ராகுல் காந்தி

 
இந்தியா

‘‘எப்ஸ்டீன் கோப்புகள், அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தான் நாட்டுக்கு அவமானம்’’ - மோடிக்கு ராகுல் பதில்

வெற்றி மயிலோன்

புது டெல்லி: காங்கிரஸ் கட்சி அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டிய நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமரின் பெயர் இடம்பெற்றுள்ளது மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் நலன்களை மத்திய அரசு விற்றது ஆகியவை தான் நாட்டின் அவமானம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மோடிஜி, நீங்கள் அவமானத்தைப் பற்றிப் பேசுகிறீர்களா?. அவமானம் என்றால் என்ன என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில் உங்கள் பெயர், உங்கள் அமைச்சர் மற்றும் உங்கள் நண்பரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. உங்கள் பெயர்கள் ஒரு மோசமான குற்றவாளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதான் அவமானகரமான விஷயம். நீங்கள் அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம், அதில் நீங்கள் நாட்டையே விற்றுவிட்டீர்கள், இது வெட்கக்கேடானது.

          

அமெரிக்காவிடம் நீங்கள் நாட்டின் தரவுகளை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் விவசாயிகளை அழித்துவிட்டீர்கள். நீங்கள் ஜவுளித் தொழிலை அழித்துவிட்டீர்கள். இது வெட்கக்கேடானது. அமெரிக்காவில் அதானிக்கு எதிராக நடந்து வரும் வழக்கு உங்களை தூங்கவிடாமல் செய்தது என்பது முழு நாடும் அறிந்ததே. ஏனென்றால் அது பாஜக மற்றும் உங்கள் நிதிக் கட்டமைப்பிற்கு எதிரான வழக்கு. 14 மாதங்களாக, அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அது வெட்கக்கேடானது" என்று தனது பதிவில் குறிப்பிட்டார்.

மேலும் அவர், "மோடிஜி, உங்கள் நண்பர்கள் அனில் அம்பானி, அதானி மற்றும் உங்களுக்கு எது பொருத்தமானதோ அதைச் செய்யுங்கள். நானும் காங்கிரஸின் சிங்க இதயம் கொண்ட வீரர்களும் நாட்டைப் பாதுகாப்போம். நாங்கள் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம். பிரதமரின் கண்களில் பயம் இருக்கிறது. அதனால்தான் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை அவர் எதிர்கொள்ளவில்லை” என்று கூறினார்.

மோடியின் விமர்சனம்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வை, கண்ணியமற்ற அரசியலை அரங்கேற்றும் அரங்கமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் முன்பாக ஆடையை காங்கிரஸ் கட்சியினர் களைந்து நின்றனர்.

நீங்கள் அப்படித்தான் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கும்போது ஏன் உங்களது ஆடையைக் களைய வேண்டும்? இதை நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்தியாவை அவமதித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் இத்தகைய செயலுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக உள்ளது நிலைமை. இந்தச் செயலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினர் அவர்களை விட்டு சற்று விலகி உள்ளனர்.

நீங்கள் பிரதமர் அரியணையில் அமர வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். இன்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தங்களின் எதிர்காலத்தை அவர்கள் பார்க்கிறார்கள். 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவாலுக்கு இந்தியா தீர்வு தரும் என உலகம் கருதுகிறது.

முன்னொரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் இருந்தும், அது நடக்காத ஒன்றாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.

SCROLL FOR NEXT