புது டெல்லி: பக்ரா மற்றும் பியாஸ் நதிகள் மீதான 60 ஆண்டு கால சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கண்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே 20 ஆண்டுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே பக்ரா மற்றும் பியாஸ் நதிகள் தொடர்பாக சுமார் 60 ஆண்டுகளாக சர்ச்சை நிலவியது. இது நாட்டின் மிகப் பழமையான மற்றும் மிகவும் சிக்கலான மாநிலங்களுக்கு இடையிலான சர்ச்சைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பஞ்சாபின் சட்லஜ் நதியின் குறுக்கே பக்ரா-நங்கல் நீர்மின் திட்டம் 1944-ல் முன்மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே மாநிலத்தின் மற்றொரு நதியான பியாஸின் குறுக்கே தேஹர் மற்றும் பொங் அணைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. நவம்பர் 1, 1966 இல் 'பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சண்டிகர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. மேலும், இமாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்குள் ஒரு பெரிய பகுதி சேர்க்கப்பட்டது.
மறுசீரமைப்பு சட்டத்தின் 78 ஆவது பிரிவின் கீழ், பக்ரா-நங்கல் மற்றும் பியாஸ் திட்டங்கள் தொடர்பான உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இந்த அணைகளின் திட்டத்திற்காகத் தனது நிலப்பரப்பிலிருந்தே நிலமும் வளங்களும் இமாச்சலப்பிரதேசம் அளித்திருந்தது. இதன் காரணமாக, அப்போதிருந்தே இத்திட்டத்தின் மீதான உரிமையைத் தனக்குச் சொந்தமானது என்று இமாச்சலப் பிரதேசம் கோரி வந்தது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இதை எதிர்த்து கடந்த 1996ல் இமாச்சலப் பிரதேசம், இந்திய அரசியலமைப்பின் 131ஆவது பிரிவின் கீழ், 1996 இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் மீது செப்டம்பர் 27, 2011 அன்று, உச்ச நீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இதன்படி, பிரிக்கப்படாத பஞ்சாபின் மின்சாரத்தில் 7.19 சதவீதப் பங்கினை இமாச்சலப் பிரதேசம் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உரிமை, பக்ரா திட்டத்திற்கு 1966 நவம்பர் 1-லிருந்தும், தேஹர் திட்டத்திற்கு 1977 நவம்பர் முதலும், பாங் அணைத் திட்டத்திற்கு 1978 ஜனவரி முதலும் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த 2011 தீர்ப்பின்படி, இமாச்சலப் பிரதேசம் தனது 7.19 சதவீத மின்சாரப் பங்கினைப் பெறத் தொடங்கிய போதிலும், 1966 முதல் 2011 அக்டோபர் வரையிலான நிலுவைப் பங்கினைப் பெறவில்லை. இதற்கான தனது உரிமையை இமாச்சலப் பிரதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் மூன்று மாநிலங்களுக்கு இடையிலான இப்பிரச்சனைக்கு, தற்போது உச்ச நீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகன் ஆகியோர் அடங்கிய இந்த அமர்வு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. இதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இணைந்து, அடுத்த 20 ஆண்டுகளுக்கு இமாச்சலப் பிரதேசத்திற்கு மொத்தம் 11,973 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்க வேண்டும். இந்த மின்சாரம் பணமாக அல்லாமல், மின்சாரமாகவே வழங்கப்படும். மத்திய அரசு முன்வைத்த 'பணமில்லா தீர்வு' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
மத்திய மின்சார ஆணையத்தின்படி, இமாச்சலப் பிரதேசத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மின்சார அளவு 13,066 மில்லியன் யூனிட்டுகள். இதில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் அணை கட்டுமானத்தின் போது மூலதனச் செலவுகளுக்காகவும், கடன் சேவைக்காகவும் செலவிட்ட ரூ.420.77 கோடி தொகையானது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் பஞ்சாபின் பங்கு ரூ.249.23 கோடியாகவும், ஹரியானாவின் பங்கு ரூ.171.55 கோடியாகவும் மதிப்பிடப்பட்டது. இந்தச் சரிசெய்தலுக்குப் பிறகு, இமாச்சலப் பிரதேசத்திற்கு வழங்க வேண்டிய மின்சார அளவு 11,973 மில்லியன் யூனிட்டுகளாகக் குறைக்கப்பட்டது. அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி முன்னிலையில், மூன்று மாநிலங்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த சமரசத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.