இந்தியா

அமலாக்கத்துறை விசாரணையில் அத்துமீறிய விவகாரம் - மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மோகன் கணபதி

புதுடெல்லி: ஐ-பேக் நிறுவனத்துக்கு எதிராக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிரடியாக தலையிட்டு ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரத்தில் மேற்கு வங்க அரசு, முதல்வர் மம்தா பானர்ஜி, காவல்துறை ஆகியோருக்கு சம்மன் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் ஆலோசனை நிறுவனமான ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகம், அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த 8ம் தேதி சோதனை நடத்தியது.

கொல்கத்தாவின் லோடன் தெருவில் உள்ள பிரதிக் ஜெயினின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மம்தா பானர்ஜி, பல்வேறு ஆவணங்களை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். நான் அவற்றை அவர்களிடம் இருந்து மீட்டுக் கொண்டு வந்தேன். அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?. இதற்கும், நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை.’’ என குற்றம் சாட்டினார்.

இது குறித்து அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. கடந்த 9ம் தேதி கொல்கத்தா உயர் நீதிமன்றம் இதை விசாரித்தபோது, ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் நுழைந்ததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு தொடர்பாக ஐ-பேக் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தலையிட்டு ஆவணங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பிரசாந்த் மிஸ்ரா, விபுல் பஞ்சோலி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அமலாக்கத்துறை விசாரணையின்போது அங்கிருந்த ஆவணங்களை மம்தா பானர்ஜி திருடிச் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவாக மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது, மாநில காவல்துறை அதிகாரிகளை இதுபோன்ற வழக்குகளுக்கு உதவவும் தூண்டவும் ஊக்குவிக்கும். எனவே, மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார் மற்றும் பிற உயர் காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

மம்தா பானர்ஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "நிலக்கரி ஊழல் வழக்கில் 2024 பிப்ரவரியில் விசாரணை நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தேர்தல்களை ஐ-பேக் நிறுவனம்தான் கவனித்துக்கொள்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது தொடர்பாக ஐ-பேக் நிறுவனத்துக்கும் திரிணமூல் காங்கிரசுக்கும் இடையே முறையான ஒப்பந்தம் உள்ளது.

தேர்தல் தரவுகள் ரகசியமானவை. அவை அனைத்தும் அங்குதான் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் குறித்த பல தகவல்கள் அங்கு இருக்கும். அந்த தகவல்கள் அவர்களிடம் கிடைத்துவிட்டால், நாங்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவது? கட்சியின் தலைவருக்கு (மம்தா பானர்ஜிக்கு) அதை பாதுகாக்கும் உரிமை உண்டு. அதனால்தான் அவர் அங்கு சென்றார்" என வாதிட்டார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள், "உங்கள் தேர்தல் தரவுகளை பறிமுதல் செய்யும் நோக்கம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் அதை எடுத்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எடுக்கவில்லை. உணர்ச்சிகள் மீண்டும் மீண்டும் கட்டுப்பாட்டை மீற அனுமதிக்க முடியாது" என தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேற்கு வங்க அரசு, மம்தா பானர்ஜி, மாநில காவல்துறை ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT