புதுடெல்லி: உத்தர பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில், 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 16-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள, அருண் சிங், கீதா (எ) சந்திரபிரபா, பிரிஜ் லால், ராம் கோபால் யாதவ், நீரஜ் சேகர், ராம்ஜி கவுதம், பி.எல்.வர்மா, சீமா துவிவேதி, தினேஷ் சர்மா மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகிய 10 பேரின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது.
இதுபோல உத்தராகண்ட் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நரேஷ் பன்சாலின் பதவிக்காலமும் முடிவடைய உள்ளது. இதையடுத்து, உத்தரபிரதேசம் (10), உத்தராகண்ட் (1) மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக்டோபர் 16-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அன்றே முடிவுகள் இத்துடன் மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் அதே நாளில் இடைத் தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு காலை 9 முதல் 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு தொடங்கும். அன்றே முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.