இந்தியா

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அக்.4-ல் மும்பையில் பேரணி: தாக்கரே சகோதரர்கள் அறிவிப்பு

மோகன் கணபதி

மும்பை: தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு எதிராக நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி) ஆகியவை இணைந்து அக்டோபர் 4-ம் தேதி மும்பையில் பேரணி நடத்தப்போவதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளனர்.

மும்பையின் தாதர் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கூறியது: “சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி) இணைந்து அக்டோபர் 4-ம் தேதி மும்பையில் பேரணி நடத்த உள்ளது.

இந்த பேரணி மும்பையின் பைக்கல்லா பகுதியில் இருந்து பிஎம்சி தலைமையகம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெறும். நவநிர்மாண் சேனா மற்றும் சிவ சேனா (யுபிடி) தலைமையில் இந்த பேரணி நடைபெறும் என்ற போதிலும், இதில் பங்கு பெறுபவர்கள் தேசியக் கொடியை மட்டுமே ஏந்திச் செல்வார்கள். எனவே, எந்தவொரு கட்சியும் இந்த பேரணியில் இணையலாம். பொதுமக்களும் பெருமளவில் இணைய வேண்டும் என்று நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் நாங்கள் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகிறோம். ஆனால், அவை தீர்க்கப்படாமலேயே உள்ளன.

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 29-ல் போராட்டம் நடத்துகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 2-ம் தேதி போராட்டம் நடத்துகிறது. நாங்கள் அக்டோபர் 4-ம் தேதி நடத்துகிறோம். தேவைப்பட்டால் நாங்கள் ஒன்றிணைவோம்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்த உள்ள சிறை நிரப்பும் போராட்டத்துக்கு எங்கள் ஆதரவு உண்டு. அதேபோல், நாங்கள் நடத்தும் பேரணியில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT