இந்தியா

“தேர்தல் ஆணையம் மக்களின் சந்தேகங்களை போக்க வேண்டும்” - மத்திய அமைச்சர் சீராக் பாஸ்வான்

மோகன் கணபதி

பாட்னா: சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் நிலவும் கருத்து வேறபாடுகள் குறித்த செய்திகளால் மக்கள் மனதில் எழுந்துள்ள ஐயங்களைப் போக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று சிராக் பாஸ்வான் கேட்டுக்கொண்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் நடைமுறை மற்றும் சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறை தொடர்பான முடிவுகள் மற்றும் உத்தரவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இது, தேர்தல் ஆணையர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்பியுள்ளது. இதன் காரணமாக, ஞானேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், “மத்திய அமைச்சர் என்ற முறையில் அரசின் ஓர் அங்மாக நான் இருந்தாலும், ஒரு அரசியலமைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்தை ஆதரித்துப் பேசும் நோக்கம் எனக்கு இல்லை.

அதேவேளையில், அரசியல் ரீதியாக தங்களுக்குச் சாதமான நிலைப்பாட்டையே எப்போதும் எடுக்கும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் நான் பெரிதாகக் கவலைப்படவில்லை.

எனினும், தேர்தல் நடைமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கினால் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

எனவே, தேர்தல் ஆணையம் தனது விலக்கத்தை இன்னும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ராகுல் காந்தியும் அவரது சகாக்களும் கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், மக்களின் மனதில் உள்ள ஐயங்களை அது நிச்சயம் போக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT