திருமலை: திருமலையிலும் எல்நினோ பாதிப்பு காணப்படுகிறது. உஷ்ண நிலை அதிகரிப்பதாலும், போதிய மழை இல்லாததாலும் இந்த ஆண்டு தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
திருமலையில் 7,500 வாடகை அறைகள் பக்தர்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது. மேலும் 5 பிஏசி சத்திரங்களும் உள்ளது. இவை தவிர பொது கழிவறைகள் உள்ளன. இதனால் தினமும் சுமார் 60 லட்சம் கன அடி தண்ணீர் திருமலையில் உபயோகப்படுத்தப்படுகிறது.
இதில் பாபவிநாசம் அணையில் இருந்து 15 லட்சம் கன அடி, கோகர்பம் அணையில் இருந்து 15 லட்சம் கன அடி, திருப்பதியில் உள்ள கல்யாணி அணையில் இருந்து 30 லட்சம் கன அடி நீர் திருமலைக்கு அனுப்பப்படுகிறது.
திருமலையில் உள்ள பாபவிநாசம், ஆகாச கங்கை, கோகர்பம் அணை, குமார தாரா, பசுபு தாரா அணைகளில் இருந்து தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. இவற்றில் குமார தாரா, பசுபுதாராவில் தண்ணீர் மிகவும் வற்றி விட்டது.
தற்போது கோகர்பம் மற்றும் பாபவிநாசம் அணைகளில் சிறிதளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த தண்ணீரும் வெறும் 90 நாட்களுக்கு மட்டுமே வரும் என உயர் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.