திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்), ‘ஐ.டி. ஆலோசனை சேவைகள்’ என்ற பெயரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் வசித்து வந்த வாடகை வீட்டில், கடந்த ஜூன் மாதம் வீணாவிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையில், வீணாவுக்கு எதிரான சோதனைகளின் போது, சில கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில பணப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் இடம் பெற்றிருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விசாரணையின் போதும், சோதனைகளின் போதும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் டி.வீணா மற்றும் மருமகனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான பி.ஏ.முகமது ரியாஸ் உள்ளிட்டோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக்கோரி, கேரள காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) 66(2)-வது பிரிவின் கீழ், கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளது.