கோழிக்கோடு: கேரளாவில் தங்கக் கடத்தல் தொடர்பாக நடந்த அமலாக்கத் துறை சோதனையில், “அதிகாரிகள் ஆள் மாறி என் வீட்டில் சோதனை நடத்திவிட்டனர்” என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் மடக்கராவில் உள்ள நவுஷாத் என்பவர் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற அமலாக்கத் துறை குழு சோதனை நடத்தியது. தங்கக் கடத்தல், ஹவாலா நெட்வொர்க்குக்கு எதிராக ஐந்து மாவட்டங்களில் நடந்த சோதனையின் ஒரு பகுதி இதுவாகும். அதிகாரிகள் காட்டிய பாஸ்போர்ட் புகைப்படத்தில் இருந்தவர் தான் இல்லை என்று அப்போதே கூறியதாக நவுஷாத் தெரிவித்தார். உள்ளூர் கவுன்சிலரும் அக்கம்பக்கத்தினரும் அதையே கூறியதாகவும், ஆனாலும் சோதனை தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
சோதனை வாரண்டில் நவுஷாத் வலப்பில் என்ற பெயர் மட்டுமே இருந்ததாகவும், தனது பெயர் நவுஷாத் வடக்கேப்புரத் என்றும் அவர் கூறினார். அதற்கு, வீட்டின் புகைப்படமும் சோதனை உத்தரவும் தங்களிடம் இருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர் என்றார்.
இதுகுறித்து நவுஷாத் வடக்கேப்புரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இது சோதனையின்போது தயாரிக்கப்பட்ட பஞ்சநாமாவின் (சம்பவ இட ஆய்வு அறிக்கை) நகலாகும். அமலாக்கத்துறை அதிகாரிகள் கையொப்பமிட்ட இதில், எனது வீட்டில் குற்றம் சம்பந்தப்பட்ட எதுவும் கிடைக்கவில்லை, கைப்பற்றவும் இல்லை என்று பதிவாகியுள்ளது. இதனுடன் தொடர்புடைய அதிகாரி உதவி இயக்குநர் அபிஜித் ஆகும். சோதனையின்போது அதிகாரிகள் சில கேள்விகளை மட்டுமே கேட்டனர்.
ஜவஹர் அல்லது இப்ராஹிமை எனக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். ஏதாவது அறக்கட்டளை அல்லது அமைப்புடன் தொடர்பு உண்டா என்றும் கேட்டார்கள். நான் எந்த சாதி, மத அமைப்பிலும் இருந்ததில்லை என்று சொன்னேன். அதன்பிறகு வேறு எந்த முக்கிய விசாரணையும் நடக்கவில்லை.
சோதனைப் பதிவை ஏற்கும் முன், அதை மலையாளத்தில் விளக்கச் சொன்னேன். ஆங்கிலத்தில் எழுதினால் போதாது. நானும் என் குடும்பத்தினரும் புரிந்துகொள்ள மலையாளத்தில் மொழிபெயர்த்துத் தர வேண்டும் என்று கேட்டேன்.
வீட்டில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பதற்கு எழுத்துப்பூர்வ உறுதிப்பாடும் தேவை என்று கேட்டேன். பின்னர் அதிகாரிகள் கையொப்பமிட்ட நகலை என்னிடம் வழங்கினர்.
இந்நிலையில் சரியான நபரின் வீட்டுக்கே சென்றதாகவும், முகவரியில் தவறு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்கு அமலாக்கத்துறை இதுவரை வெளிப்படையாக விளக்கம் அளிக்கவில்லை. நவுஷாத்தின் கூற்றுகளின் உண்மைத்தன்மையும் சரிபார்க்கப்படவில்லை.
காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் அமலாக்கத் துறையின் கொச்சி பிரிவு சோதனை நடத்தி வருகிறது. பணப் பரிமாற்றப் பதிவுகள், மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.