புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தின் புதிய வாக்காளர் சேர்க்கைக்கான படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் முதல்முறை வாக்காளர்கள், தங்களின் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியின் பெயர்கள் கடந்த 2000-களின் தொடக்கத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
இந்தப் பிரிவு ‘கட்டாயமில்லை’ என குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், இணையவழி படிவத்தில் இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் படிவத்தைச் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 1960-ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ளாமல், நேரடியாக இந்த புதிய நிபந்தனையை இணைத்தது சட்டவிரோதமானது என தேர்தல் ஆணையாளர்கள் விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தில், பயன்பாட்டில் உள்ள படிவம் 6-ல் எந்தவித சட்டரீதியான மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
“அங்கீகரிக்கப்பட்ட படிவம் 6 அப்படியேதான் உள்ளது. அதற்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டியின் விவரங்களை இணைப்பதற்கான இந்த கோரிக்கை, எஸ்ஐஆர் விதிகளின் கீழ் 'இணைப்பு டி' என்ற கூடுதல் உறுதிமொழிப் படிவமாக மட்டுமே சேகரிக்கப்படுகிறது” எனத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, படிவம் 6 அல்லது படிவம் 8 சமர்ப்பிக்கும் போது கூடுதலாக இந்த 'இணைப்பு டி' படிவமும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.