புதுடெல்லி: நாட்டில் 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளும் பணிகள் மே 30-ம் தேதி தொடங்கும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது 3-ம் கட்டமாக நடைபெறும் எஸ்ஐஆர் பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பிஹாரில் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றது. இப்போது 3-ம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முறை இமாச்சல் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் எஸ்ஐஆர் பணிகள் வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. அப்பகுதிகளில் தட்பவெப்ப சூழல் உள்ளிட்ட சில காரணங்களால் அங்கு பின்னர் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.94 பிஎல்ஓக்கள்: 3-ம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் 3.94 லட்சம் பிஎல்ஓக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது “தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் வீடுகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இந்தப் பணிகளுடனேயே எஸ்ஐஆர் பணிகளையும் இணைத்து களப் பணியாளர்களை திறம்பட பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என்றது.
இதற்காக 3.94 லட்சம் பூத் லெவல் ஆஃபீசர்ஸ் எனப்படும் பிஎல்ஓக்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் 36.73 கோடி வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று ஆவணங்களை சரிபார்ப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3-ம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில், டெல்லியும் இடம்பெறுகிறது. டெல்லியில் இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணைய வட்டாரத் தகவலின்படி, இமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக்கில் மக்கள் தொகை 2-ம் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் முடிந்த பின்னர் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3-ம் கட்ட எஸ் ஐஆர் பணிகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “வாக்காளர்கள் அனைவரும் 3-ம் கட்ட எஸ்ஐஆர் பணிகளில் தங்களை உற்சாகமாக இணைத்துக் கொண்டு தங்களை தகுதியான வாக்காளர் என்பதை உறுதி செய்ய உரிய கணக்கீட்டுப் படிவத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
நாட்டில் முதல் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையில் நடைபெற்றது. இதில் பிஹாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மொத்த வாக்காளர்களில் இது 5 முதல் 6 சதவீதம். அதன் பின்னர் நடந்த பிஹார் தேர்தலில் ஆர்ஜேடி - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
2-ம் கட்ட எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27, 2025-ல் நடைபெற்றது. இதில் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்பட 3 யூனியன் பிரதேசங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.04 கோடி வாக்காளர்களும், அடுத்தபடியாக மேற்குவங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.
அதன் பின்னர் நடந்த 5 மாநில தேர்தலில் தமிழகம், கேரளம், மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அசாம், புதுச்சேரியில் பாஜக ஆட்சி தொடர்கிறது.